நூலாசிரியர் இராம.வேதநாயகம்

Estimated read time 0 min read

Web team

IMG-20240306-WA0028.jpg

அமிழ்தினும் இனிது!
நூல் ஆசிரியர் : கவிஞர் புலவர் இராம. வேதநாயகம்
வனிதா பதிப்பகம் : 11, நானா தெரு, பாண்டி பஜார், தியாகராய நகர்,
சென்னை – 600 017. பேச : 044 42070663 விலை : ரூ. 80
நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி
*****
நூலாசிரியர் கவிஞர் புலவர் இராம. வேதநாயகம் அவர்களின் அமிழ்தினும் இனிது நூல் பெயர் பொருத்தம் மிக நன்று. அமிழ்தினும் இனிய கவிதைகளை குழந்தைப் பாடல்களை வடித்துள்ளார். பாராட்டுக்கள். தமிழன்னைக்கு அணி செய்யும் விதமாக படைத்துள்ளார். தமிழே அறியாமல் இன்றைய குழந்தைகள் வளர்ந்து வருகின்றன. தமிழ்மொழி பற்றியும் பண்பாடு பற்றியும் நமது குழந்தைகளுக்கு கற்பிக்க உதவிடும் நூல். ஒவ்வொரு தமிழரின் இல்லத்திலும் இருக்க வேண்டிய நூல். மிக எளிமையாகவும், இனிமையாகவும் பாடல்களை செதுக்கி உள்ளார்கள். படித்ததும் குழந்தைகள் மனதில் பதியும்படியாக செதுக்க உள்ளார்கள்.
முதல் கவிதை புதிய ஆத்திசூடி படித்தால் போதும் வாழ்க்கையில் கடைபிடித்தால் வாழ்க்கை சிறக்கும்.
புதிய ஆத்திச்சூடி!
அனுதினம் பள்ளி செல்
ஆசு நீக்கு
இனிக்கப் பேசு
ஈதல் சிறப்பு
உள்ளம் தூய்மை செய்
ஊக்கம் கொடு
எண்ணித் துணிக
ஏணி போல உதவு
ஐயம் போக்கு
ஒற்றுமையே உயர்வு
ஓதுதல் விலக்கேல்
ஒளவை வழி செல்.
குழந்தகளுக்கு அறிவு புகட்டும் விதமாகவும், சொற்களையும் அதற்குரியனவற்றையும் அறிமுகப்படுத்தும் விதமாகவும் பாடல் புனைந்து உள்ளார்கள்.
எறும்பைப் போல …
கரும்பைப் போல நீயும் / இனித்திட வேணும் பாப்பா
எறும்பைப் போல நீயும் / உழைத்திட வேணும் பாப்பா
மானைப் போல நீயும் / துள்ளிட வேணும் பாப்பா
தேனைப் போல நீயும் / சுவைத்திட வேணும் பாப்பா
இன்றைய குழந்தைகள் பள்ளி செல்கின்றனர். பள்ளி முடிந்து வந்து விளையாடுவதற்கு நேரமே இல்லை. தனிப்பயிற்சி வகுப்பிற்கு அனுப்பி விடுகின்றனர். இரவாகி விடுகின்றது. உறங்கி விடுகின்றனர். வெளிஉலகமே தெரியாத கிணற்றுத் தவளையாகவே வளர்ந்து வருகின்றனர். அவர்களுக்கு விளையாடுக என்று அறிவுறுத்தும் விதமாக வடித்த பாடல் மிக நன்று.
முன்னின்று விளையாட்டை நடத்து!
மாலையில் விளையாடு தம்பி – நீ / மகிழ்வாக ஓடியாடு தம்பி!
வேளையில் பள்ளி செல் தம்பி – உனக்கு / வெறும் படிப்பு போதாது தம்பி காலையில் கடமைகள் தம்பி – நீ / கனிவாகச் செய்திடுவாய் தம்பி
வாழைபோல நன்மைகள் தம்பி – நீ / வளமாக செய்திடுவாய் தம்பி.!
மகாகவி பாரதியார் பற்றி குழந்தைகளுக்கு அறிவிக்கும் விதமாக வடித்த பாடல் ஒன்று மிக நன்று.
பாரதியாரின் கதை கேளு!
எட்டையபுரத்தில் பிறந்தவர் / எளிமை வாழ்வில் சிறந்தவர்
எட்டாவளர்ச்சி கவிதையில்
ஏழு வயதில் பாடினார்.
குழந்தைப்பாடல் இசைத்தவர் / குயிலின் பாட்டில் மகிழ்ந்தவர்
பழகும் பொருளை எல்லாமே / பாட்டில் கொண்டு வந்தவர்.
பாரதியாரின் இயல்பையும், பாடிய வரிகளையும் கண்முன் கொண்டு வந்து வெற்றி பெறுகின்றார் நூலாசிரியர் புலவர் இராம. வேத நாயகம்.
அறிவியல் அறிவும் குழந்தைகளுக்கு அவசியம் தேவை. எதையும் ஏன்? எதற்கு? எப்படி? எதனால் என்று யோசிக்க வைக்க உதவுவது அறிவியல். எனவே அறிவியல் குறித்தும் பாடியது சிறப்பு.
அறிவியலைப் படி!
அறிவியலைப் படி தம்பி – நீ / ஆற்றலையே பெறு தம்பி!
கருவிகளைப் பயன்படுத்தி – நீ / காரியங்கள் செய் தம்பி!
ஏவுகணை பார் தம்பி – நல் / ஏற்றம் தரும் தம்பி!
பாய்ந்து வரும் அணுகுண்டு / நம் பாரதத்தில் உண்டு தம்பி!
அறுவடைத் திருநாள் உழைப்பைப் போற்றும் திருநாள் இயற்கைக்கு நன்றி சொல்லும் தமிழர் திருநாள் பொங்கல் பற்றிய பாடல் நன்று.
பொங்கல் நல்ல பொங்கலாம்!
பொங்கல் நல்ல பொங்கலாம் / புதுமையான பொங்கலாம்!
எங்கும் உள்ள தமிழரும் / ஏற்றிப் போற்றும் பொங்கலாம்!
புதிய பானை வைத்தே தான் / புதிய அரிசி போடுவர்!
விதமாய் மஞ்சள் சேர்த்தே தான் / வெற்றி கீதம் பாடுவர்!
ஒரு நூலகம் திறக்கும் போது நூறு சிறைச்சாலைகள் மூடப்படும் என்று பொன்மொழி உண்டு. ஊடகங்களின் வருகையின் காரணமாக வாசிக்கும் பழக்கம் வழக்கொழிந்து நூலகத்திற்கு வருவோர் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. குழந்தைகளுக்கு நூலகம் செல்லும் பழக்கத்தை பெற்றோர்கள் பழக்கி விட வேண்டும். நூலகம் பற்றிய கவிதை நன்று.
நூலகமே வழிகாட்டி!
நூலகமே வழிகாட்டி – நல்ல
நூல்களே
நூலகமே மதியூட்டி – நல்ல
நூல்களே கைகாட்டி.
மரபுக்கவிதையின் தனிச்சிறப்பு என்னவென்றால் எதுகை, மோனை, இயைபுடன் ஓசை நயத்துடன் படித்தால் மனதில் பதிந்து விடும். மரபுக் கவிதை விரும்பிகளுக்கு நல்விருந்தாக உள்ளது நூல். தமிழுக்கு அமுதென்று பேர் என்றார் புரட்சிக்கவிஞர் நூலாசிரியர் புலவர் இராம. வேதநாயகம் அவர்கள். அமிழ்தினும் இனிது எம் தமிழ் என்று பறைசாற்றி உள்ளார்.
நாளந்தா பல்கலைக்கழகம் என்பது ‘நாளும் தா’ என்ற தமிழ்சொல்லில் இருந்து வந்தது. காளி கோட்டம் என்ற தமிழ்ச்சொல்லே கல்கத்தா என்றாகி தற்போது கொல்கத்தா ஆனது. பட்டினம் என்ற தமிழ்ச் சொல்லே பாட்னா ஆனது. இப்படி பல தகவல் அடங்கிய ஆங்கில ஒளிக்காட்சி கண்டேன். தமிழன் என்று சொல்லுவோம், தலை நிமிர்ந்து நிற்போம் என்று சொல்லத் தோன்றியது. இந்த நூல் படித்து முடித்த போதும் அந்த உணர்வே தோன்றியது.
குழந்தைப்பாடல்கள் மூலம் குழந்தைகளுக்கு தமிழ்மொழி அறிவையும் பொது அறிவையும் வளர்த்து உள்ளார்.
மிதிவண்டி!
மிதிவண்டி நல்ல மிதிவண்டி / மிதமாய்ச் செல்லும் மிதிவண்டி
புதுவண்டி நல்ல புதுவண்டி / போகும் விரைந்தே புதுவண்டி
சிறுவர்கள் எல்லாம் ஓட்டிடலாம் / சிறுமிகளும் நன்றாய் ஓட்டிடலாம்
பெரியவர்கள் எல்லாம் ஓட்டிடலாம் / புதுமையான மிதி வண்டி.
இந்தப் பாடல் படிக்கும் குழந்தைகளுக்கு மிதிவண்டி பற்றிய அறிவு மனதில் பதிந்து விடும். மிதிவண்டியை மறக்க மாட்டார்கள்.
நூலாசிரியர் கவிஞர் புலவர் இராம. வேதநாயகம் அவர்களுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

Please follow and like us:

You May Also Like

More From Author