அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பைச் சமாளிக்க தமிழகத்திற்கு மேலும் பேரிடர் நிவாரண நிதியை வழங்குவது குறித்து மத்திய அரசு விரைவில் முடிவு செய்யும் என்று மத்திய அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இது தொடர்பாக மத்திய உண்மை கண்டறியும் குழு அறிக்கை சமர்ப்பித்த பிறகே கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு விடுவிக்கப்படும் என்றார்.
தமிழகத்திற்கு பேரிடர் நிவாரண நிதியாக மத்திய அரசு ஏற்கனவே 1,000 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. கூடுதல் தொகையை கோரும் முன், அந்த தொகையை மாநில அரசு முதலில் பயன்படுத்த வேண்டும்.
மத்திய அரசு அமைத்த குழு, அறிக்கை தயாரிக்கும் பணியில் உள்ளது. அறிக்கை தாக்கல் செய்த பின், கூடுதல் நிதி குறித்து முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர் டிஆர்.பாலு தகாத முறையில் நடந்து கொண்டதாகவும் அவர் கூறினார். காங்கிரஸ் ஆட்சியின் போது நிதி நிலைமை எவ்வாறு மோசமாக இருந்தது என்பது குறித்து வெள்ளை அறிக்கை மூலம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எடுத்துரைத்ததாகவும் அவர் கூறினார்.