ராமேஸ்வரம் : இலங்கை கடற்படையால் ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேர் இன்று (ஜூலை 22) கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த நிலையில், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. மேலும், அவர்களது விசைப்படகுடன் சிறைபிடிக்கப்பட்டனர். இச்சம்பவம் மீனவர் சமூகத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது, கைது செய்யப்பட்ட மீனவர்கள் 4 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து மன்னார் கடற்படை முகாமில் வைத்து இலங்கை கடற்படை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட மீனவர்களிடம் விசாரணை, மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது மற்றும் அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதனிடையே, கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை விடுவிக்க உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக முதலமைச்சர் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.