தமிழே மூச்சாக வாழ்ந்த பெருங்கவிக்கோ!

Estimated read time 1 min read
தமிழறிஞர் பெருங்கவிக்கோ என்ற அழைக்கப்படும் கவிக்கோ வா.மு. சேதுராமன் (91) உடல்நலக்குறைவு காரணமாக ஜூலை 4 ஆம் தேதியன்று சென்னையில் காலமானார்.

இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் வட்டத்திலுள்ள ஆண்டநாயகபுரம் என்னும் ஊரில் 1935-ஆம் ஆண்டு பிறந்தார். ஏழ்மையில் வளர்ந்தாலும், சுயமுயற்சியால் தமிழ் வித்துவான், முதுகலை, பி.எட்., பட்டங்களைப் பெற்றார்.
பின்னர், திருவல்லிக்கேணி முஸ்லீம் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். சென்னை பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். ‘தமிழ்ப்பணி’ என்னும் சிற்றிதழை தொடர்ந்து நடத்திவந்தார்.
ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலகிருஷ்ணன் தன் இரங்கல் செய்தியில், “தமிழே பேச்சாகவும் மூச்சாகவும் வாழ்ந்தவர். எனது தமிழாசான் மு.தமிழ்க்குடிமகன் மூலம்‌ பெருங்கவிக்கோவின் கவிதைகளின் அறிமுகம் 1976 ஆம் ஆண்டு கிடைத்தது.
பின்னர் பேராசிரியர் தமிழ்க்குடிமகன் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவராக இருந்தபோது சென்னையில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
சென்ற ஆண்டு தமிழ்நாடு திரும்பிய பிறகு தான் அவரை வெவ்வேறு நிகழ்வுகளில் நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.‌
90 வயதில் ஒருவர் இவ்வளவு ஆர்வத்துடன் சுறுசுறுப்புடன் செயல்படுகிறாரே என்று வியப்படைந்திருக்கிறேன்.
அவரது மகன்கள் வா.மு.சே. திருவள்ளுவா், வா.மு.சே. கவியரசன், வா.மு.சே. ஆண்டவர், வா.மு.சே. தமிழ் மணிகண்டன், மகள் வா.மு.சே. பூங்கொடி என்று சிறந்த தமிழ்க் குடும்பத்தின் தலைவர்.
அன்னாரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
கவிஞர் வைரமுத்து, “மீசைத் தமிழர் என்று ஆசைத் தமிழர்களால் அழைக்கப்பட்ட பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் மறைந்துவிட்டார் என்ற செய்தியால் நெஞ்சம் ஒருகணம் நின்று துடித்தது.
தன் மொத்த வாழ்க்கையை முத்தமிழுக்கே காணிக்கையாக்கிய மாணிக்கத் தமிழர் வா.மு.சேதுராமன்.
எண்ணம், சொல், செயல் யாவிலும் தனித்தமிழையே தாங்கிப்பிடித்தவர். தமிழுக்காக நடைப்பயணம் சென்று சென்று கால்கள் தேய்ந்தாலும் கொள்கை தேயாத கோமான்.
அவரது தமிழ்ப்பணி இதழ் என் தொடக்ககாலக் கவிதைகளை வெளியிட்டு வெளிச்சம் தந்தது என்பதை நான் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன்.
வளையாத முதுகெலும்பும் நிலையான கொள்கையும் சலியாத உழைப்பும் சரியாத தமிழ்ப் பற்றும்கொண்ட பாவேந்தர் மரபின் நல்லதொரு பெருங்கவிஞன் நம்மைவிட்டு நீங்கிவிட்டார் என்று பாரதிதாசன் கவிதா மண்டலமே கண்ணீர் வடிக்கும்.
ஒரு வெற்றிடம் உண்டாகிவிட்டது. வா.மு.சேதுராமனின் தோற்றத்திற்கும் ஏற்றத்திற்கும் ஈடு கொடுக்கும் இன்னொரு கவிஞன் இங்கு இல்லை. போய்வாரும் கவிஞரே! எங்களோடு உங்கள் தமிழ் இருக்கும்” என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author