எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

Estimated read time 1 min read

எதிர்காலத்தில் போர்கள் எவ்வாறு நடைபெறும் என்பதைச் செயற்கை நுண்ணறிவு தீர்மானிக்கும் எனக் கூறப்படுகிறது. அத்தகைய செயற்கை நுண்ணறிவின் பங்கு, இந்திய ராணுவத்தில் எந்தளவு உள்ளது என்பது குறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, பாகிஸ்தான் 400க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை இந்தியாவின் முக்கிய நகரங்கள் மற்றும் இராணுவத் தளங்கள் மீது குறிவைத்து ஏவியது. அவற்றில் ஒன்று கூட இந்தியாவின் எல்லைக்குள் நுழையவில்லை. இந்தியாவின் வலிமை மிக்க பாதுகாப்பு அமைப்புகள் அவற்றை நடுவானிலேயே இடைமறித்து அழித்தன.

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குச் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அதிகளவில் கை கொடுத்துள்ளது. இதனையடுத்து, இந்திய ராணுவத்தில் செயற்கை நுண்ணறிவை இன்னும் சிறப்பாகப் பயன்படுத்த அதிகாரிகளும், விஞ்ஞானிகளும்

மும்முரம் காட்டி வருகின்றனர்.

2018ம் ஆண்டில் அமெரிக்க பாதுகாப்புத் துறை, அதன் செயற்கை நுண்ணறிவு உத்தியை வெளியிட்டது. முன்னதாக, 2017ஆம் ஆண்டு அடுத்த தலைமுறை செயற்கை நுண்ணறிவு மேம்பாட்டுத் திட்டத்தைச் சீனா வெளியிட்டது.

2025ம் ஆண்டுக்குள் AI துறையின் அடிப்படை கோட்பாடுகளைச் சீனாவே வடிவமைக்கும் என்றும், 2030ஆம் ஆண்டுக்குள் உலகின் முதன்மை AI கண்டுபிடிப்பு மையமாகச் சீனா மாறும் என்றும் அந்த திட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. AI ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காகச் சீன அரசு 2.7 பில்லியன் டாலர்கள் ஒதுக்கி வருகிறது.

இந்தியாவும் பாதுகாப்புத் துறையில் செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டை மேம்படுத்தி உள்ளது. 2018ஆம் ஆண்டு, தேசியப் பாதுகாப்பில் AI இன் தாக்கங்களை ஆய்வு செய்ய என்.சந்திரசேகரன் பணிக்குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், பாதுகாப்பு AI கவுன்சில் (DAIC) மற்றும் பாதுகாப்பு AI திட்ட நிறுவனம் (DAIPA) ஆகியவை உருவாக்கப்பட்டன.

மேலும், iDEX என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் Defence India Startup Challenge, இந்திய பாதுகாப்புப் படைகளுக்கு மேம்பட்ட தொழில்நுட்பங்களை உருவாக்கித் தரும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்குகிறது. அதாவது, பாதுகாப்புத் துறையில் உள்ள பல்வேறு தொழில்நுட்ப சவால்களை அடையாளம் கண்டு, அவற்றை எதிர்கொள்ளும் வகையில்,சரியான தீர்வை வழங்கும் நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது.

செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபாட்டிக்ஸ் மையத்தின் மூலம் DRDO விஞ்ஞானிகளுக்குப் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. 2022ஆம் ஆண்டு நடைபெற்ற ‘பாதுகாப்பில் AI’ என்ற கருத்தரங்கு மற்றும் கண்காட்சியின்போது புதிதாக உருவாக்கப்பட்ட 75 செயற்கை நுண்ணறிவு (AI) தயாரிப்புகளை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிமுகப்படுத்தி வைத்தார். மேலும், “பாதுகாப்புத் துறையில் AI மற்றும் பிக் டேட்டா போன்ற தொழில்நுட்பங்களைச் சரியாக பயன்படுத்துவது முக்கியம் எனவும் அப்போது தெரிவித்தார்.

ஏற்கெனவே, இந்தியாவின் இந்திரஜால் தன்னாட்சி ட்ரோன் பாதுகாப்பு அமைப்பு, UAV அச்சுறுத்தல்களுக்கு எதிராகப் பல அடுக்கு ட்ரோன் வான் பாதுகாப்பை வழங்குகிறது. பாகிஸ்தான் மற்றும் சீன எல்லைகளில் செயற்கை நுண்ணறிவு கண்காணிப்பு அமைப்புகளை இந்திய ராணுவம் நிலைநிறுத்தியுள்ளது. ஆளில்லா வான்வழி வாகனங்களும், செயற்கை நுண்ணறிவு பயன்பாடும் இந்திய விமானப் படையை நவீனமயமாக்கி உள்ளன.

கடல்சார் கண்காணிப்பு பணிகளிலும் AI ஐ பயன்படுத்துகிறது. AI ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத்தில் அமெரிக்காவும் சீனாவும் முன்னணியில் இருந்தாலும், பாதுகாப்பு அமைப்புகளில் அதிநவீன கண்டுபிடிப்புகளை ஒருங்கிணைத்து இந்தியாவும் ஆதிக்க செலுத்தத் தொடங்கியுள்ளது.

அமெரிக்காவும் இந்தியாவும் பாதுகாப்பு செயற்கை நுண்ணறிவு துறையில் இணைந்து செயல்படவும் தற்போது ஒப்புக்கொண்டுள்ளன. இரு நாடுகள் சண்டையிடுகின்றன என்றால், அதில் எந்த நாடு சிறந்த தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளதோ அந்த நாடு வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

எனவே, தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட போருக்குத் தயாராகும் நோக்கத்தில் 2025-ம் ஆண்டை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் ‘சீர்திருத்த ஆண்டாக’ அறிவித்துள்ளது. செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் இந்திய ராணுவத்தை மேலும் வலுப்படுத்தும் பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

Please follow and like us:

You May Also Like

More From Author