ரெயில்களில் பயணம் செய்ய முன்பதிவு செய்த பயணிகளுக்கான அட்டவணை வெளியீட்டு நேரம் தொடர்பாக மத்திய ரெயில்வே துறை முக்கிய மாற்றம் ஒன்றை கொண்டுவந்துள்ளது.
இதுவரை, ரெயில்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கான முன்பதிவு உறுதிப்பட்டியல் (Chart) ரெயில் புறப்படுவதற்கு நான்கு மணி நேரத்திற்கு முன்பு மட்டுமே வெளியிடப்பட்டு வந்தது. இதனால், காத்திருப்புப் பட்டியலில் உள்ள பயணிகள் கடைசி நேரத்தில் மிகுந்த குழப்பம் மற்றும் சிரமங்களை எதிர்கொண்டு வந்தனர்.
பயணிகள் எழுப்பிய புகாரை அடுத்து, மத்திய ரெயில்வே மந்திரி அஷ்வினி வைஷ்ணவ், கடந்த மாதம் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின்போது, அட்டவணை வெளியீட்டு நேரத்தை 4 மணி நேரத்திலிருந்து 8 மணி நேரத்திற்கு முன்பே மாற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டார். அதன் தொடர்ச்சியாக, புதிய நடைமுறையை ரெயில்வே வாரியம் நேற்று அறிவித்துள்ளது.
அதன்படி, அதிகாலை 5 மணி முதல் மதியம் 2 மணி வரை புறப்படும் ரெயில்களுக்கு, அதன் முந்தைய நாள் இரவு 9 மணிக்கே முன்பதிவு அட்டவணை தயாரிக்கப்பட வேண்டும். அதேபோல், மதியம் 2 மணி முதல் அடுத்த நாள் அதிகாலை 5 மணி வரை புறப்படும் ரெயில்களுக்கான அட்டவணை, அந்த ரெயில் புறப்படுவதற்கு 8 மணி நேரத்திற்கு முன்பே வெளியிடப்பட வேண்டும்.
இந்த நடவடிக்கையின் மூலம், பயணிகள் தங்களுடைய டிக்கெட் நிலையை துல்லியமாக, முன்னதாகவே அறிந்து கொள்ள முடியும் என்றும், கடைசி நேர பயண பிரச்சனைகள் குறையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த புதிய நடைமுறை தற்போது தெற்கு ரெயில்வேயில் நேற்று முதல் அமலுக்கு வந்துவிட்டது. இதனை ரெயில்வேவின் அனைத்து கோட்டங்களிலும் பின்பற்றுமாறு, தெற்கு ரெயில்வே வணிகப்பிரிவு சார்பில் சுற்றறிக்கையும் அனுப்பப்பட்டுள்ளது. பயண வசதிக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த மாற்றம் பயணிகளிடம் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.