மிகவும் மாசுபட்ட நகரங்களின் பட்டியலில், தலைநகர் டெல்லி முதல் இடத்தில் உள்ளது.
ஜனவரி மாதத்தில் மிகவும் மாசுபட்ட நகரங்களின் பட்டியலை எரிசக்தி மற்றும் சுத்தமான காற்றுக்கான ஆராய்ச்சி மையம் (CREA) வெளியிட்டுள்ளது. 254 நகரங்களில், டெல்லியில் அதிக காற்றுமாசு பதிவாகி உள்ளது.
முதல் பத்து மாசுபட்ட நகரங்களின் பட்டியலில் தலைநகர் டெல்லி முதலிடத்தில் உள்ளது. தலைநகர் டெல்லிக்கு அடுத்தபடியாக, பீகாரில் உள்ள பாகல்பூர் நகரம் ஜனவரி மாதத்தில் நாட்டிலேயே அதிக மாசுபட்ட நகரங்களில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
டெல்லி மற்றும் பாகல்பூருக்கு அடுத்தபடியாக, சஹர்சா, பர்னிஹாட், கிரேட்டர் நொய்டா, ஹனுமன்கர், நொய்டா, பாடி, ஸ்ரீகங்காநகர் மற்றும் ஃபரிதாபாத் ஆகியவை ஜனவரி மாதத்தில் மிகவும் மாசுபட்ட நகரங்களில் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
இந்த 10 நகரங்களிலும் வாழும் மக்கள் ஜனவரி மாதத்தில் ஒரு நாள் கூட சுத்தமான காற்றை சுவாசிக்கவில்லை. ஜனவரி மாதத்திற்கான சராசரி காற்றின் தரக் குறியீடு 354 ஆகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.