திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு பாதயாத்திரை வரும் பக்தர்கள் நலன் கருதி புதுக்குளத்தில் சிறப்பு அன்னதான கூடம் இன்று திறந்து வைக்கப்பட்டது.
திருச்செந்தூர் அருள்மிகு ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயில் மாசி திருவிழாவையொட்டி நாகர்கோவில், கன்னியாகுமரி , வள்ளியூர், திசையன்விளை மற்றும் கேரள பகுதியில் இருந்து பாதயாத்திரையாக பக்தர்கள் அதிக அளவில் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
இதனையொட்டி, சாத்தான்குளம் பகுதியில் பாதயாத்திரை வரும் பக்தர்களுக்காக, முருக பக்தர்கள் சார்பில் மூன்று வேளையும் அன்னதானம் வழங்கப்பட்டு வந்தது.
தற்போது திருச்செந்தூரில் மாசி திருவிழா தொடங்கியுள்ளதையொட்டி, பாதயாத்திரையாக வரும் முருக பக்தர்களுக்கு நாள் தோறும் அன்னதானம் வழங்கும் வகையில் முருக பக்தர்கள் சார்பில் புதுக்குளத்தில் சிறப்பு அன்னதான கூடம் அமைக்கப்பட்டு திறக்கப்பட்டது.
கூடத்தை திருச்செந்தூர் கோட்டாட்சியர் குருசந்திரன் தலைமை வகித்து திறந்து வைத்தார். தொடர்ந்து, அன்னதானத்தையும் தொடங்கி வைத்தார். இதில், ஏராளமான முருக பக்தர்கள் கலந்து கொண்டனர்.