நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு சாதிவாரியாக நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது சாதிவாரி கணக்கெடுப்பு சேர்க்கப்பட வேண்டும் என்று கேபினட் அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்னவ் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு மிகவும் வெளிப்படையான முறையில் நடைபெறும் என்றும் கூறினார். காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளின் நீண்ட நாள் கோரிக்கையான சாதிவாரி கணக்கெடுப்பை ஒன்றிய அரசு ஏற்றுள்ளது.
இட ஒதுக்கீடு மற்றும் இதர நலத்திட்ட பணிகளை மிகச் சரியான விகிதத்தில் செயல்படுத்த சாதிவாரி கணக்கெடுப்பு உதவியாக அமையும் எனக் கூறப்படுகிறது. இதற்கு முன்பு கடந்த 2011ம் ஆண்டில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 2021ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைபெறுவதாக இருந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டது
வடகிழக்கில் ஷில்லாங் முதல் சில்சார் வரை புதிய தேசிய நெடுஞ்சாலை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மேகாலயா மற்றும் அசாமை இணைக்கும் வகையில் சுமார் 22,000 கோடி மதிப்பில் தேசிய நெடுஞ்சாலை திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. கரும்புக்கான குறைந்தப்பட்ச ஆதார விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.355 ஆக நிர்ணயித்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.