ஒகேனக்கலில் நீர்வரத்து குறைந்ததால் நான்கு நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க மட்டும் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.
காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்த தொடர் மழைக்காரணமாக கர்நாடகாவில் உள்ள கபின் மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பின. இந்த இரு அணைகளில் இருந்து தமிழகத்திற்கு வெளியேற்றப்பட்ட உபநீர் காரணமாக ஐந்து நாட்களுக்கு முன்பு ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து ஒரு லட்சத்து 25 ஆயிரம் கன அடி வரை அதிகரித்திருந்தது. ஒகேனக்கலுக்கு வரும் நீரின் அளவும் அதிகரித்துக் காணப்பட்டதால் பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

ஆனால் அதன்பிறகு கர்நாடகா அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டதால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் தமிழக எல்லைப் பகுதியான பிலிகுண்டுலுவில் நேற்று மாலை நிலவரப்படி வினாடிக்கு 28 ஆயிரம் கன அடியாக குறைந்த நீர்வரத்து, இன்று காலை 6 மணி நிலவரப்படி மேலும் குறைந்து வினாடிக்கு 20 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
இந்த நீர்வரத்து குறைந்ததன் காரணமாக பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் மீண்டும் அனுமதி வழங்கியுள்ளது. சின்னாறு கோத்திகள் பரிசல் துறையில் இருந்து மணல் தீட்டு வரை பரிசல் இயக்க மட்டும், நான்கு நாட்களுக்குப் பிறகு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது. மேலும் குளிப்பதற்கான தடை தொடர்ந்து ஐந்தாவது நாளாக நீடித்து வருகிறது.
