வெற்றிப்பூக்கள்

Estimated read time 0 min read

Web team

IMG-20241020-WA0032.jpg

வெற்றிப் பூக்கள்
நூல் ஆசிரியர் : சிந்தனைக் கவிஞர் கவிதாசன்
குமரன் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை,
தியாகராயர் நகர், சென்னை – 600 017. பேச : 044 2435 37452. பக்கம் : 128 விலை : ரூ. 80
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.

******

கோவையின் பெருமைகளின் ஒன்றானாவர். மாமனிதர் அப்துல்கலாம் அவர்களுக்கு தொகுப்பு நூல் தொகுப்பு செய்து 10 பதிப்புகளுக்கு மேல் வந்து விட்டது. பேச்சு, எழுத்து இரண்டு துறையிலும் தனி முத்திரை பதித்து வருபவர். தன்னம்பிக்கை பயிலரங்கம் நடத்தி வருபவர். புன்னகையை முகத்தில் எப்போதும் அணிந்திருப்பவர். இனிமையின் இருப்பிடமாக இருப்பவர். இனிய நண்பர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன், நூல் வெளியானதும் கையொப்பம் இட்டு எனக்கு அனுப்பி இருந்தார், நன்றி.

71 தலைப்புகளில் புதுக்கவிதைகள் உள்ளன. புதுக்கவிதை மட்டுமல்ல, புதிய கருத்துக்களை கொண்டுள்ள கவிதை நூல். இளைஞர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல்.

முதல் கவிதையே முத்தாய்ப்பாக உள்ளது.

நெஞ்சில் சுமக்கிறேன்!

உனக்கு / நேரம் ஒதுக்கி வாசித்தேன்
தினந்தினம் வளர்கிறேன் புத்தகமே!

வெற்றியாளர்கள், சாதனையாளர்கள் அனைவரும் வாசிப்பை வழக்கமாகக் கொண்டுள்ளனர் என்பதை இளைய சமுதாயம் உணர்ந்து தினந்தோறும் வாசிப்பதற்கு சில மணி நேரம் ஒதுக்க வேண்டும் என்பதை உணர்த்தியது கவிதை.

வெற்றி தேவதை தேடுகிறாள்!

உருகி மறைவதற்க்கு / நீ ஒன்றும் பனித்துளியல்ல!
நீ நெருப்பை விழுங்கும் சூரியன் / நீ அக்னியை உமிழும் எரிமலை!

கவிதை வரிகளைப் படிக்கும் போது தன்னம்பிக்கை மலர்கள் மனதில் பூத்து விடுகின்றன. அத்தகைய ஆற்றல் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் அவர்களின் வைர வரிகளுக்கு உண்டு. எப்போதுமே முகாரி ராகம் பாடுவதில்லை. பூபாளமே இசைத்து வருகிறார்.

நீயின்றி!

நீயின்றி உயிர் வாழ முடியாது!
உனது நினைவுகளால் தாகம் தீராது!
உயிர் பிரியும் வேளையிலும் / உன் வரவை
எதிர்பார்ப்பேன் தண்ணீரே!

‘நீரின்றி அமையாது உலகு’ என்ற திருவள்ளுவரின் வாக்கை வழிமொழிந்து எழுதிய கவிதை நன்று.

மலருங்கள் மாணவர்களே!

தந்தையும் தாயும் போற்றி ! / அறிவாற்றல் ஆசான் போற்றி!
இயற்கையின் இதயம் போற்றி! / ஈடில்லா பண்பாடு போற்றி!
மலருங்கள் மாணவர்களே!

மாதா, பிதா, குரு, தெய்வம் பொன்மொழியை வழிமொழிந்து வடித்த கவிதை நன்று!.

மாணவர்களை மலர்களைப் போலவே மலருங்கள் என்றது அருமை.

வெற்றியின் திசைகள்!

உண்மையும் உழைப்பும் / உன்னை சூழந்தால்
உண்மையில் நீ தான் தலைவன்!
சிந்தனைப் பூக்களில் தெளிவுத் தேனெடுத்து
வாழ்வை இனிமையாக்கு!

வாழ்வில் வெற்றி பெற உதவிடும் மந்திரச் சொற்களின் மூலம் கவிதைகள் வடித்துள்ளார். இந்த நூல் படித்து முடித்தவுடன் வாசகர்கள் மனதில் புது ரத்தம் பாய்ச்சிய உணர்வு வரும். என்னால் முடியும் என்ற தன்னம்பிக்கை விதைக்கும் கவிதைகள் நூல் முழுவதும் உள்ளன.

முன்னேற்றம் உனது பிறப்புரிமை!

முன்னேற்றம் உனது பிறப்புரிமை
முன்னேற முயற்சி தான் மூலதனம்!
கனவே முயற்சிக்கு எழுச்சியாகும்
எண்ணமே எழுச்சிக்கு ஏணியாகும்!
வாழ்க்கைப் பயணத்தில் வெல்ல
முயற்சியும் பயிற்சியும் வேண்டும்!

முயற்சி, பயிற்சி இருந்தால் வாழ்க்கையில் சாதிக்கலாம், எதுவும் செய்யாமல் சோம்பேறியாக இருந்து விட்டு கற்பனையாகக் கற்பிக்கப்பட்ட ‘விதி’யின் மீது குற்றம் சொல்லும் சராசரிகள் படித்துத் திருந்த வேண்டிய நூல்.

காதலைப் பாடாத கவிஞன் இல்லை. காதலைப் பாடாதவன் கவிஞனே இல்லை. சிந்தனைக் கவிஞர் கவிதாசன் அவர்களும் காதலைப் பாடி உள்ளார்.

என் இதயத் துடிப்பு!

பூக்கள் அல்ல / உன் நினைவுகள் / வாடிப் போவதற்கு!
சிறகுகள் அல்ல / உன் நினைவுகள் / உதிர்ந்து போவதற்கு!
நதி அல்ல / உன் நினைவு / வற்றிப் போவதற்கு
உணவில்லாமல் கூட உயிர் வாழ்வேன்
உன் நினைவில்லாமல் / என் உயிரில்லை.

இந்தக் கவிதையைப் படிக்கும் வாசகர்களுக்கு அவரவர் காதலியின் நினைவு வந்து போகும் என்று உறுதி கூறலாம்.

மறைந்தும் மறையாத மாமனிதர் அப்துல் கலாம் பற்றிய கவிதை மிக நன்று.

கலாமுக்கு ஒரு கடிதம்!

பிறப்பு தரித்திரமாக இருந்தாலும்
இறப்பு சரித்திரமாக இருக்க வேண்டும் என்பதை
மெய்யாக்கிய எங்கள் சரித்திரம் நீ!

ஆம். கலாம் அவர்கள் சொன்னபடியே வாழ்ந்து சிறந்தார். சரித்திரமாக மக்கள் மனங்களில் நின்றார்.

மனைவியிடம் பேசுங்கள்!

உங்கள் பேச்சு வெட்டிக் கிழிக்கின்ற
கத்திரிக்கோலாக இல்லாமல் / கிழிசல்களைத்
தைக்கிறா / ஊசியாக இருக்கட்டும்!

மனைவியிடம் மனம் விட்டுப் பேசுங்கள், மனைவியுடம் மட்டுமல்ல நண்பர்களிடமும், அலுவலகப் பணியாளர்களிடமும், சந்திக்கும் மனிதர்கள் அனைவரிடமும் இதனைக் கடைபிடித்தால் சண்டை வராது, சமரசம் நிலவும்.

புத்தாண்டில் புதுக்கனவு!

புத்தாண்டில் புத்தம்புதுக்கனவு மலரட்டும்!
புத்துணர்வு அருவியிலே நெஞ்சம் குளிக்கட்டும்!
தப்பேதும் இல்லாமல் வாழ்க்கை தழைக்கட்டும்!
தலைமுறைகள் வாழ்த்தி உன்னை வணங்கட்டும்!

பிடித்த வரிகள் உள்ள கவிதைகளை மடித்து வைத்துக் கொண்டே வந்தேன். நூலில் பாதியளவு மேற்கொள்களே இவ்வளவு வந்து விட்டது. இன்னும் பாதி உள்ளது.

உலக உத்தமரே கலாம்!

உலகெலாம் புகழ்ந்து போற்றும் உத்தமரே!
ஆயிரங்காலத்து பச்சைக் கனவுகளை
அடிநெஞ்சில் விதைத்தவரே! விண்வெளியின் வித்தகரே!
அப்துல் கலாம்! அற்புதக் கலாம்!
எங்கள் கலாம்! எங்கும் கலாம்!

மற்றவை வெள்ளித்திரையில் காண்க! என்பது போல, வெற்றிப் பூக்கள் நூலினை வாங்கிப் படித்து அறிந்து கொள்ளுங்கள். இந்த நூலின் விலை ரூ. 80 செலவல்ல, மூலதனம். இனிய நண்பர் கவிதாசன் அவர்களுக்குப் பாராட்டுக்கள்.

*****

Please follow and like us:

You May Also Like

More From Author