முன்னர் சொத்துக்குப் பட்டா பெறுவது கடினமாக இருந்த நிலையில், தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் நடவடிக்கையால், https://eservices.tn.gov.in/eservicesnew/home.html இணையதளம் மூலம் எளிதாகப் பட்டா பெறலாம் என்றும், பத்திரப்பதிவு செய்தவுடன் உட்பிரிவு இல்லாத சொத்துகளுக்கு உடனடி பட்டா மாறுதல் செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது சொத்துரிமை விவரங்களை மக்கள் மேலும் எளிதாக அறியும் வகையில், தமிழக வருவாய்த்துறை ‘பட்டா வரலாறு’ என்ற புதிய ஆன்லைன் சேவையை அறிமுகப்படுத்த உள்ளது. வழக்கமாகப் பத்திரப்பதிவுத் துறையின் வில்லங்கச் சான்றிதழ் (EC) மூலமே ஒரு சொத்தின் பரிமாற்ற விவரங்களை முழுமையாக அறிய முடியும்.
ஆனால், இப்போது கொண்டு வரப்படவுள்ள ‘பட்டா வரலாறு’ சேவை மூலம், நிலத்தின் முந்தைய உரிமையாளர்கள் யார், பெயர் மாற்றம் எப்போது, எந்த ஆணையின் பேரில் நடந்தது போன்ற அனைத்து விவரங்களையும் பொதுமக்கள் தெரிந்துகொள்ள முடியும்.
இந்தக் கட்டணச் சேவை, முதற்கட்டமாக ஒரு தாலுகாவில் அடுத்த வாரம் முதல் சோதனை அடிப்படையில் தொடங்க உள்ளது; சோதனை வெற்றி பெற்றால், முதல்வர் மு.க.ஸ்டாலின் இதனைப் பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவார். தற்போது 2014-ஆம் ஆண்டு முதல் உள்ள பட்டா விவரங்களை மட்டுமே இம்முறையில் அறிய முடியும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
