இமயமலைப் பகுதியில் 60 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான அணுசக்தி கருவி ஒன்று, தற்போது வரைக் கதிர்வீச்சு அச்சுறுத்தலுக்கு வித்திட்டபடியே உள்ளது. அந்தக் கருவி எதற்காகப் பொருதப்பட்டது? எப்படிக் காணாமல் போனது? இந்தச் செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
1962ம் ஆண்டு இந்தியா மீது சீனா போர் தொடுத்தது. அந்தப் போரால், இந்தியா பெரும் சேதத்தைச் சந்தித்தது. சில பகுதிகளையும் இழந்தது. இந்தப் போர் நடைபெற்ற அடுத்த 2 ஆண்டுகளில் சீன அரசு, வெற்றிகரமாக அணுகுண்டு சோதனையும் நடத்தி முடித்தது. இதனால், அந்தச் சமயத்தில் இந்தியாவின் பாதுகாப்புக்கு மேலும் அச்சுறுத்தல் ஏற்பட்டது. எனவே, எல்லையில் பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டிய கட்டாயம் இந்திய அரசுக்கு ஏற்பட்டது. குறிப்பாக, தனது எல்லைப் பகுதியில் சீனா என்ன செய்கிறது என்பதைத் துல்லியமாக கண்காணிக்க வேண்டிய அவசியம் உருவானது.
எல்லையில் சீன அரசு அணுஆயுதச் சோதனைகளை நடத்துகிறதா?, இந்திய எல்லையைத் தாண்டி ஏவுகணைகளை அனுப்புகிறதா என்பதை அறிய என்ன செய்யலாம் என அதிகாரிகள் ஆலோசித்தனர். அந்த ஆலோசனையின் முடிவில், எல்லைப் பகுதியில் அணுசக்தியால் இயங்கும் டிவைஸ் ஒன்றைப் பொருத்த முடிவு செய்யப்பட்டது.
உத்தரகாண்டில் உள்ள நந்தாதேவி சிகரம் அதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. அதுதான், இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய சிகரம் என்பதால், அங்கிருந்தபடி சீனாவின் நடவடிக்கைளைக் கண்காணிக்க திட்டமிடப்பட்டது.
இந்தியாவுக்கு உதவ அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ-வின் அதிகாரிகளும் முன்வந்தனர். திட்டமிட்டப்படியே அந்த அணுசக்தி சாதனம் நந்தாதேவி சிகரத்தில் பொருத்தப்பட்டது. அந்தச் சாதனம் RTG ஜெனரேட்டர் மூலம் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்த இடத்தில் RTG குறித்து தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது.
RTG ஜெனரேட்டர் என்பது ஒரு அணுக்கரு பேட்டரியாகும். Radioisotope Thermoelectric Generator என்பதன் சுருக்கம்தான் RTG. இதன் மையத்தில் உள்ள கதிரியக்க ஐசோடோப் சிதைவடையும்போது வெப்பம் உருவாகும். அந்த வெப்பம் பின்னர் மின்சாரமாக மாற்றப்பட்டுப் பயன்படுத்தப்படும். பெரும்பாலும், புளூட்டோனியம்-238 தான் இந்த வகையிலான மின்சாரத் தயாரிப்புக்கு பயன்படுத்தப்படுகிறது. சுருக்கமாகக் கூறுவதென்றால், கதிரியக்கப் பொருட்களில் இருந்து வெளிப்படும் வெப்பத்தை மின்சாரமாக மாற்றும் பேட்டரிதான் RTG.
நேரடியாக மின்சார இணைப்பு கொடுக்க முடியாத தொலைதூர இடங்களில் இத்தகைய RTG ஜெனரேட்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக, விண்வெணி பயணங்களின்போது மின்சாரத்தைப் பெற இவை உதவுகின்றன.
தற்போது சூரிய குடும்பத்தின் வெளிப்புற கோள்களை ஆய்வு செய்ய நாசா அனுப்பிய வாயேஜர் விண்கலன்களுக்கு இந்த RTG ஜெனரேட்டர்கள்தான் மின்சாரத்தை வழங்குகின்றன. செவ்வாயை ஆய்வு செய்யும் ரோவரின் இயக்கத்திற்கும் இவைதான் ஆற்றலை அளிக்கின்றன.
இத்தகைய RTG ஜெனரேட்டர் மூலம்தான் நந்தாதேவி சிகரத்தில் பொருத்தப்பட்டிருந்த சாதனத்திற்கும் மின்ஆற்றல் வழங்கப்பட்டு வந்தது. ஆனால், அடுத்த சில வருடங்களில் அந்தச் சாதனமும், RTG ஜெனரேட்டரும் திடீரெனக் காணாமல் போயின. பனிப்பொழிவில் நன்றாகப் புதைந்திருக்கலாம் எனச் சிலர் கூறினர். இல்லை இல்லைப் பனிச்சரிவில் அவை அடித்து செல்லப்பட்டிருக்கலாம் என மற்றொரு தரப்பினர்த் தெரிவித்தனர். எது எப்படியிருந்தாலும், அவை மாயமாகிவிட்டன.
அந்தச் சாதனமும், RTG ஜெனரேட்டரும் இன்றுவரை நந்தா தேவி மலைத்தொடரின் ஏதோ ஒரு பகுதியில்தான் புதைந்திருப்பதாக நம்பப்படுகிறது. இது ஆய்வாளர்கள் மத்தியில் சிறிய அளவிலான அச்சத்தை ஏற்படுத்தியவண்ணமே உள்ளது. காரணம், RTG ஜெனரேட்டர் என்பது கதிரியக்கத்தை ஏற்படுத்தும் பேட்டரி. அது வெடிக்காது என்றாலும், அதனால் கதிரியக்கப் பாதிப்புகளை ஏற்படுத்த முடியும். குறிப்பாக, மலைப்பகுதியில் இருந்து உருவாகும் நதிகளின் வாயிலாகக் கதிரிக்க பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
இதனை அறிந்திருந்த ஆய்வாளர்கள் 1978ம் ஆண்டே இது குறித்து ஆய்வு ஒன்றை நடத்தினர். நந்தாதேவியின் பனியாலான மலைமுகடுகளில் இருந்து உற்பத்தியாகும் ஆறுகளில் கதிரியக்கப் பாதிப்புகள் உள்ளதா என ஆய்வு செய்தனர். ஆனால், அவ்வாறு எந்தப் பாதிப்பும் ஏற்படாதது அனைவருக்கும் சற்று ஆசுவாசத்தை அளித்தது. ஆனால், தற்போது நிலைமை மாறியிருக்கவும் வாய்ப்பு உள்ளது.
RTG பேட்டரியுடன் கூடிய கருவி புதைக்கப்பட்டுத் தற்போது 60 ஆண்டுகளைக் கடந்துவிட்டது. இதுவரை அது எங்குள்ளது என்பது கண்டறியப்படாததால், கதிரியக்கப் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு இன்னும் இருக்கவே செய்வதாக ஆய்வாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
