நாட்டின் விளையாட்டு தலைநகரமாக உருவெடுக்கும் “அகமதாபாத்”!

Estimated read time 1 min read

2030ம் ஆண்டு COMMON WEALTH விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் வாய்ப்பைப் பெற்ற அகமதாபாத் மற்றும் காந்திநகர் நகரங்கள் வளர்ச்சி பாதையில் வேகமாகப் பயணிக்கத் தொடங்கியுள்ளன. புதிய விளையாட்டு வளாகங்கள், மேம்பட்ட போக்குவரத்து வசதிகள், உயர்தர நட்சத்திர விடுதிகள் என மக்கள் பங்கேற்புடன் இந்நகரங்கள் இந்தியாவின் முக்கிய விளையாட்டு மையமாக உருவெடுக்கத் தொடங்கியுள்ளன.

குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் மற்றும் காந்திநகர் நகரங்கள் 2030-ம் ஆண்டுக்கான COMMON WEALTH விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ளன. அதன் தொடர்ச்சியாக அவ்விரு நகரங்களிலும் மேம்பாட்டு பணிகள் அதிவேகமாக நடைபெற்று வரும் நிலையில், சுமார் 30 ஆயிரம் பேர் வரை வேலைவாய்ப்பு பெறும் நிலை உருவாகியுள்ளது. COMMON WEALTH SPORT GENERAL ASSEMBLY-ன் ஒப்புதலுடன் COMMON WEALTH போட்டிகளுக்கான விளையாட்டு வளாகங்கள், உறுதியான காலக்கெடுவுக்குள் கட்டமைக்கப்படும் எனத் துறை சார்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தப் போட்டிகளை நடத்த SVP SPORTS ENCLAVE என்ற பெயரில் ஒரு விளையாட்டு மாவட்டம் தயாராகி வருகிறது. விளையாட்டு அரங்குகள், நீச்சல் மையம், டென்னிஸ் கோர்ட்டுகள், பயிற்சி மையங்கள், விளையாட்டு வீரர்களுக்கான ஓய்விடங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அப்பகுதியில் உருவாக்கப்படவுள்ளன. அதேபோல, கராய் போலீஸ் அகாடமி வளாகத்தில் தடகளம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெறவுள்ளன. இதனால் அங்கு உருவாக்கப்படவுள்ள வசதிகள் அனைத்தும் குறுகிய காலத்திற்கு மட்டுமல்லாமல், 2030-க்கு பிறகும் பயன்படக்கூடிய நிலையான அமைப்பாக இருக்க வேண்டும் என்பது குஜராத் அரசின் திட்டமாக உள்ளது.

COMMON WEALTH விளையாட்டு போட்டிகளுக்கான அறிவிப்புக்குப் பின் அகமதாபாத் இந்தியாவின் விளையாட்டு தலைநகராக உருவெடுத்துள்ளதாக அம்மாநில விளையாட்டுத்துறை செயலர் அஷ்வினி குமார் தெரிவித்தார். இது தொடர்பாகப் பேசிய அவர், சர்தார் வல்லபாய் படேல் விளையாட்டு மைதானம் மற்றும் போலீஸ் அகாடமி ஸ்போர்ட்ஸ் ஹப்பின் பணிகள் அனைத்தும், வரும் 2026 ஆண்டு ஏப்ரலில் தொடங்கி 2028-ம் ஆண்டு இறுதிக்குள்ளோ அல்லது 2029-ம் ஆண்டின் தொடக்கத்திலோ நிறைவடையும் எனவும், அதற்கான நிதிகள் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுவிட்டதாகவும் குறிப்பிட்டார்.

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான நரேந்திர மோடி மைதானத்தில் COMMON WEALTH போட்டிகளின் துவக்கம் மற்றும் நிறைவு விழாக்கள் நடைபெறவுள்ளன. பெரும்பாலான COMMON WEALTH விளையாட்டுப் போட்டிகள் அகமதாபாத் மற்றும் காந்தி நகர் ஆகிய நகரங்களுக்குள்ளாகவே நடத்தப்படவுள்ளன.

இது தவிர, சைக்கிளிங் மற்றும் மகளிர் கிரிக்கெட் போட்டிகள் மட்டும் அந்நகரங்களுக்கு வெளியே, STATUE OF UNITY மற்றும் வதோதராவில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. குறுகிய பகுதிகளுக்குள் இந்தப் போட்டிகள் அனைத்தும் நடைபெறவுள்ளதால், விளையாட்டு வீரர், வீராங்கனைகள் நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய நிலை தவிர்க்கப்பட்டுள்ளது. 2022-ம் ஆண்டு நடத்தப்பட்ட தேசிய விளையாட்டு போட்டிகளில் கிடைத்த அனுபவத்தைக்கொண்டு, நெட்பால், லான் பவுல்ஸ் போன்ற அதிகம் அறியப்படாத விளையாட்டுகளை முன்னிலைப்படுத்தவும் குஜராத் அரசின் விளையாட்டுத் துறை திட்டமிட்டுள்ளது.

அத்துடன் அகமதாபாத்தை முழுநேர விளையாட்டு நகரமாக மாற்றும் முனைப்பில் உயர் செயல்திறன் ஆய்வகங்கள், சமூக விளையாட்டு வளாகங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களுடன் இணைந்த விளையாட்டு வசதிகளை மேம்படுத்தக் குஜராத் அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. மேலும், நட்சத்திர விடுதிகளின் வசதிகள் மேம்படுத்தப்பட்டு, தற்போதுள்ள 5 ஆயிரத்து 420 உயர்தர அறைகளுடன் கூடுதலாக 3 ஆயிரம் அறைகள் சேர்க்கப்படவுள்ளன.

அதேபோல, போட்டி காலத்தில் வீரர்களுக்கான தங்குமிடமாக மாறவுள்ள பல்கலைக்கழக விடுதிகள், அதன் பின் மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் பல்வேறு வசதிகளுடன் மேம்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், COMMON WEALTH விளையாட்டுப் போட்டிகள் அகமதாபாத்தின் முகச்சாயத்தை மாற்றும் என CREDAI அமைப்பின் தலைவர் தேஜஸ் ஜோஷி தெரிவித்துள்ளார்.

போட்டியை காண வரும் விருந்தினர்களுக்குச் சுமார் 20 ஆயிரம் உயர்தர விடுதி அறைகள் வரை தேவைப்படும் என்பதால், குடியிருப்புத் தேவைகள் அதிகரிப்பதுடன், பல உலகத்தர விளையாட்டு அகாடமிகளும் உருவாகும் எனவும் அவர் தெரிவித்தார். மேலும், 2030-க்கு பின் 2036-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளையும் நடத்த அந்நகரம் இலக்கு வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குஜராத் அரசின் “ஆக்டிவ் குஜராத் திட்டம்” நதிக்கரைகள், பூங்காக்கள் ஆகியவற்றை உடற்பயிற்சி மண்டலங்களாக மாற்றியுள்ளதோடு, வாரந்தோறும் நடத்தப்படும் “சபர்மதி சண்டேஸ்” நிகழ்ச்சிகளும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. வருங்காலத்தில் NSS மற்றும் NCC மாணவர்கள் இளைஞர் நலத்துறையின் தூதர்களாக செயல்படவுள்ளதாகவும், வரும் 2030-ம் ஆண்டுக்குள் இதில் கூடுதலாக 10 ஆயிரம் தன்னார்வலர்கள் வரை இணையவுள்ளதாகவும் குஜராத் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author