இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் ஆங்காங்கே வீடுகள், பாலங்கள் சரிந்து விழுவதால் பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இந்தோனேசியாவில் பல்வேறு பகுதிகளில் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாகச் சுமத்ரா தீவின் வடக்கு சுமத்ரா மாகாணத்தில் பெய்த கனமழையால் அங்குள்ள நீர்நிலைகள் நிரம்பி பல்வேறு இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
மத்திய தபானுளி மாவட்டத்தின் சில மலைக் கிராமங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு ஆயிரக்கணக்கான வீடுகள் மண்ணுக்குள் புதைந்துள்ளன. பேரிடர் ஏற்பட்ட பகுதிகளில் வசித்து வந்த சுமார் 67 பேரைக் காணவில்லை எனக் கூறப்படும் நிலையில் அவர்களைத் தேடும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
சுமத்ரா தீவின் ஆச்சே மற்றும் மேற்கு சுமத்ரா ஆகிய மாகாணங்களிலும் ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
அச்சே மாகாணத்தில் வசித்து வந்த சுமார் 47 ஆயிரம் பேர் தங்களது வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
மேற்கு சுமத்ராவின் படாங்கில் வெள்ளப்பெருக்கால் பாலம் ஒன்று அடித்துச் செல்லப்பட்டது. சோலோக் ரீஜென்சியில் உள்ள சானியாங்பாகாவில் வெள்ளப்பெருக்கால் வீடுகள் இடிந்து விழுந்தன. இதனால் பொதுமக்கள் செய்தவதறியாது தவித்து வருகின்றனர்.
