சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.
அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்து செண்டை மேளம் முழங்கக் கோயில் கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
முன்னதாக யாகசாலையில் இருந்து புனிதநீர் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. ராஜகோபுரம், விமான கோபுரம் மற்றும் பரிவார தெய்வ கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டது.
கோயில் கலசங்கள் புனிதநீரால் நனைந்து கொண்டிருந்தபோது, பக்தர்களின் நமச்சிவாய கோஷம் விண்ணை முட்டியது.
இந்தப் புனித நிகழ்வில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் டிரோன்கள் மூலம் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது.
