நடிகர் தனுஷின் தேரே இஷ்க் மே, கீர்த்தி சுரேஷின் ரிவால்வர் ரீட்டா, சூர்யாவின் அஞ்சான், அஜித்தின் அட்டகாசம், ஒண்டிமுனியும் நல்லபாடனும், TTF வாசனின் ஐபிஎல், ஃப்ரைடே, BP 180, வெள்ளகுதிர, பூங்கா ஆகிய படங்கள் நாளை திரைக்கு வருகிறது.
இந்த வார வெள்ளிக்கிழமை வெளியீடாக, ரீ ரிலீஸ் படங்கள் உட்பட 10 திரைப்படங்கள் திரைக்கு வருகின்றன. இந்திப் பட இயக்குநர் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் நடிகர் தனுஷ் இந்தியில் கதாநாயகனாக அறிமுகமான திரைப்படம் ராஞ்ஜனா. 2013-ம் ஆண்டு வெளியான படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
நீண்ட இடைவெளிக்கு பிறகு ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் ‘தேரே இஷ்க் மே’. இதில் தனுஷ் ஜோடியாக கீர்த்தி சனோன் நடித்துள்ளார். இதற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். காதலை மையப்படுத்தி உருவாக்கிய இப்படத்தில் நடிகர் தனுஷ் விமானப்படை அதிகாரியாக நடித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பெரிய அளவில் படத்திற்கான ப்ரமோஷன் செய்யவில்லை என்றாலும் வட இந்தியாவில் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று படக்குழுவினர் ப்ரோமோஷனில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தி, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் இப்படம் நாளை திரைக்கு வருகிறது.
நவீன சரஸ்வதி சபதம் திரைப்படத்தை தொடர்ந்து ஜே.கே சந்துரு இயக்கத்தில், கீர்த்தி சுரேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘ரிவால்வர் ரீட்டா’. இதற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் ராதிகா சரத்குமார், தெலுங்கு நடிகர் சுனில், அஜய் கோஷ், ஜான் விஜய், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டார்க் காமெடி ஜானரில் உருவாகியுள்ள இப்படம் நாளை திரைக்கு வருகிறது.
சரண் இயக்கத்தில் அஜித்குமார், பூஜா, சுஜாதா, நிழல்கள் ரவி, கருணாஸ், ரமேஷ் கண்ணா உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 24 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் அட்டகாசம். நடிகர் அஜித்குமார் இரட்டை வேட நடிப்பு ரசிகர்களை கவர்ந்ததோடு, அஜித்துக்கு மாபெரும் வெற்றி படமாகவும் இது அமைந்தது. கடந்த அக்டோபர் மாதம் இப்படம் ரீ ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், 4k தரத்திலான டிஜிட்டல் பணிகள் நிறைவடையாததால் தள்ளிப்போனது. இந்நிலையில் நாளை 4k தரத்தில் இப்படம் ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது.
லிங்குசாமி இயக்கத்தில், சூர்யா, சமந்தா நடிப்பில் வெளியான அஞ்சான் திரைப்படத்தை மறு படத்தொகுப்பு செய்து நாளை ரீ ரிலீஸ் ஆக உள்ளது. அஞ்சான் திரைப்படம், கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான போது ரசிகர்கள் மத்தியில் கடும் விமர்சனத்தை சந்தித்தது. மேலும் வசூல் ரீதியில் அஞ்சான் மிகப்பெரிய தோல்வியை தழுவியது.
இந்த நிலையில் 2 மணிநேர 36 நிமிட அஞ்சான் திரைப்படத்தை 36 நிமிடங்கள் குறைத்து ரீ எடிட் செய்யப்பட்டு இரண்டு மணி நேரமாக உருவாக்கப்பட்டுள்ளது. மறு படத்தொகுப்பு கட்டாயம் ரசிகர்களுக்கு பிடிக்கும் என இயக்குனர் லிங்குசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தவிர ஒண்டிமுனியும் நல்லபாடனும், TTF வாசனின் ஐபிஎல், ஃப்ரைடே, BP 180, வெள்ளகுதிர, பூங்கா ஆகிய படங்கள் நாளை திரைக்கு வருகின்றன.
