நூலின் பெயர் : மின்னல் ஹைக்கூ
நூலாசிரியர் : கவிஞர் இரா. இரவி
வெளியீடு : வானதி பதிப்பகம்,
23, தீனதயாளு தெரு, தி.நகர்.
சென்னை-600 017.
பக்கங்கள் : 84 விலை : ரூ.80
நூல் விமர்சனம் : கவிதை உறவு (டிசம்பர் 2025) *****
ஹைக்கூ என்பது தமிழில் பாரதியால் அறிமுகமாகிய பிரபலமான கவிதை வடிவம். சுருக்கமானதும் ‘சுருக்’ என்று பதிவதுமான இந்த இந்த வடிவம் இப்போது பெரிதும் படைக்கப்படுகிற, வரவேற்கப்படுகிற வடிவமாக இருக்கிறது. இந்திய மொழிகளில் தமிழில்தான் மிகவதிகம் ‘ஹைக்கூ’ நூல்கள் வெளி வருகின்றன. கவிஞர் அமுதபாரதி, தமிழன்பன், மு. முருகேஷ் உள்ளிட்ட கவிஞர்கள் பலரால் போற்றப்படுகிற வடிவமாகவும் விளங்குகிறது. ஹைக்கூ எழுதுவதில் கவிஞர் இரா. இரவி அவர்களும் பெரிதும் அறியப்பட்டவராக இருக்கிறார். அவரது படைப்புகள் பளிச்சென்று இருக்கும். எண்ணற்ற நூல்களும் எழுதியுள்ளார். ‘மின்னல் ஹைக்கூ’ என்ற இத்தொகுப்பு அவரது படைப்பாற்றலுக்கு இன்னுமோர் சான்றாக விளங்குகிறது. வழக்கமான அவரது ஹைகூ தொகுப்பு-களிலிருந்து தொகுப்பு சற்று வேறுபடுகிறது. இந்நூலின் வடிவமைப்பு அருமை. பளபளப்பான தாளில் பளிச்சிடும் படங்களோடு புதுமை என்பது சிறப்பு. எடுத்த எடுப்பிலேயே காதல் கவிதை.
காத்திருந்த காதலன், காதலி வரும்வரை பூக்களை ரசித்ததால் அவளது தாமதத்திற்கு நன்றி சொல்கிறான். “மலர்களோடு பேசினேன். அவளின் தாமதத்திற்கு நன்றி” என்று.
குழந்தைகளின் மீதான வன்முறை இப்போது இல்லை என்றாலும் அங்கங்கே இல்லாமலும் இல்லை. இருந்தால் கண்டிக்கத்தக்கது. கண்டிக்கிறார் கவிஞர் இரா. இரவி. “தடியால் அடித்துக் கனிவதில்லை கனி, குழந்தைகளும் தான்” என்று.
தொலைக்காட்சி ஒரு பொழுதுபோக்கு மட்டுமே. நமது பொழுதெல்லாம் அதிலேயே போகிறது. இதை, “அயல்நாடுகளில் ஊறுகாய் நம் நாட்டில் சாப்பாடு தொலைக்காட்சி” என்கிறார். இதே பக்கத்தில் “பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளை போனது பச்சை வயல்” என்று வேதனைப்படுகிறார்.
கண்கள் பரிமாறிக் கொள்வதை கவிஞர் இரவி கண் தானம் என்கிறார். “உயிரோடு கண்தானம் காதலர்களாம்”. ஷாஜகானும், மும்தாஜூம் இறந்து போய்விட்டனர். என்றாலும் வாழ்கிறது தாஜ்மகால் அவர்களுக்காக… என்பதை கவிஞர் “வாழ்ந்தவர்கள் இறந்தனர் இறந்தவர்களுக்காக வாழ்கிறது தாஜ்மகால்” என்று தன் ஹைகூவில் படம்பிடித்துள்ளார்.
“குடிபோதையில் குடும்பத் தலைவர் தள்ளாடும் குடும்பம்” போன்ற இயல்பான வரிகள் நிஜ வாழ்வில் நிதர்சனங்களின் படப்பிடிப்பு. அருமையான தொகுப்பு.
