உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பு அண்மையில் வெளியிட்ட 2025ஆம் ஆண்டு உலகப் புத்தாக்கக் குறியீடு என்னும் அறிக்கையின்படி, உலகில் புத்தாக்க ஆற்றலைக் கொண்டுள்ள முதல் பெரிய பத்து பொருளாதார வல்லரசுகளுள் சீனா முதன்முறையாக நுழைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, சீனா 24 புத்தாக்க தொகுதிகளுடன் மூன்றாண்டுகளாகத் தொடர்ந்து உலகளவில் முதலிடத்தையும் பிடித்து வந்துள்ளது. இது, சீனத் தொழில் நிறுவனங்கள் ஆய்வுப் பணியில் அதிக முதலீடு செய்வதுடன் தொடர்புடையது என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது.
உலகப் பொருளாதாரத்தின் மறுமலர்ச்சி பலவீனமாக இருக்கும் நிலைமையில், சீனாவின் உயர் தர வளர்ச்சி மற்றும் நிதானமான உள்புற சூழல், சீன அறிவியல் மற்றும் தொழில் நுட்பப் புத்தாக்க ஆற்றலின் வளர்ச்சிக்கு உதவும் என்று அமெரிக்க-சீன ஒத்துழைப்பு நிதியத்தின் செயல் தலைவர் ஜோன் மிலிகன்-ஹுவெட் John Milligan-Whyte தெரிவித்தார்.
கடந்த சில ஆண்டுகளில், புத்தாக்கம் மூலம் வளர்ச்சியைத் தூண்டும் நெடுநோக்குத் திட்டத்தை சீனா ஆழமாக நடைமுறைப்படுத்தி, சீர்திருத்தத்தை மேலும் பன்முகங்களிலும் ஆழமாக்கி, பொருளாதாரம், அறிவியல் மற்றும் தொழில் நுட்பம், திறமைசாலி அமைப்பு முறை உள்ளிட்ட துறைகளில் பாடுபட்டு, அறிவியல் புத்தாக்கத்துக்கு அமைப்பு முறை உத்தரவாதத்தை வழங்கியுள்ளது. 2024ஆம் ஆண்டில் சீனா நாடளவில் ஆய்வுக்காக ஒதுக்கியத் தொகையானது, 2020ஆம் ஆண்டில் இருந்ததை விட 48 விழுக்காடு அதிகரித்துள்ளது. ஆய்வுப் பணியாளர்களின் மொத்த எண்ணிக்கை உலகளவில் முதல் இடம் வகிக்கிறது. இவை, அறிவியல் தொழில் நுட்பத்தின் புத்தாக்கத்துக்கு அதிக இயக்காற்றலை ஊட்டியுள்ளன என்று சீன ரென்மின் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரக் கல்லூரியின் பேராசிரியர் வாங் சியாவ் சுங் கருத்து தெரிவித்தார்.
சீனாவின் “புத்தாக்க ஆற்றல்” தொடர்ந்து உயர்ந்து வருவது, சீனப் பொருளாதாரத்தின் உறுதித்தன்மை மற்றும் உள்ளார்ந்த ஆற்றலை வலுப்படுத்தியுள்ளதோடு மட்டுமல்லாமல், பன்னாட்டுப் பொருளாதார முறை மேம்பாட்டைத் தூண்டி, உலகப் பொருளாதாரத்துக்கு புதிய வாய்ப்புகளையும் வழங்கியுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் சீனாவின் தலைமையில் புதிய எரியாற்றல் வாகனம், புதிய ரக மின்னாற்றல் அமைப்பு முறை, விண்வெளி முதலிய துறைகளில் 532 சர்வதேச வரையறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இது பற்றி கசகஸ்தான் ஊடகப் பணியாளர் ஒருவர் கூறுகையில், சீனா புதிய தர உற்பத்தி ஆற்றலை வளர்த்து வருவது உலகப் பொருளாதாரத்தின் தொடரவல்ல வளர்ச்சியை முன்னேற்றுவதற்குப் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது எனக் குறிப்பிட்டுள்ளார்.