திரும்ப முடியாத கருவண்டு திருப்பி போட்ட என்னை கடவுள் என்று நம்பி கடந்தது என்பது உள்ளளவில் உண்மையையே கூறுகிறது உதவுபவனே மனித வடிவில் கடவுள் அல்லவா?…
அம்மாவின் பாதி முத்தம் தம்பியின் பாசத்தை காட்டியது இருட்டும் மாளிகையானது இல்லாமையின் கொடுமையை வெளிச்சம் போட்டு காட்டுகிறது திண்ணைகளே முதுமையின் வாசஸ்தலமாய் ஆனதை காட்டுகிறது.
சுருக்குப்பை வாசம் மணம் பரப்புகிறது. எங்களுக்கான மலர் வளையங்கள் பூத்துக் குலுங்கும் அந்த அமைதி பூங்கா எது? என்ற வினா அவசியமாய் படுகிறது. திருவிழாவில் மழை வருகிறதோ இல்லையோ சாதி சண்டை வருகிறது ஒரு சாமியும் ஆடும் போது சாதி சண்டை வேண்டாம் என்று சொல்லவில்லை என்பது அழகும் அறிவும் நிறைந்தது. வானத்தைக் கீழேயும் பூமியை மேலேயும் திருப்பிப் போட வேண்டும் நிலம் எல்லோருக்கும் சமமாய் பெய்ய… என்பது சமத்துவத்தின் மீதான தாகத்தை உணர்த்துகிறது.
நாம் தூங்கி விடுவதாலே அதை இரவென்று சொல்லி விடுகிறோம் சேரிகளை வைத்துக்கொண்டு சுதந்திர தினம் கொண்டாடுவது போல் என்ற வரிகள் மனதுக்கு நெருக்கமாய் நிற்கிறது. பிரிவினை எங்களுக்கு என்று சேரியை பாகப்பிரிவினை செய்திருக்கும் அவள் எங்களை தவிட்டுக்கு வாங்கியிருப்பாளோ என்ற வரிகளும் சிறப்பு…
புழக்கடை சொம்பில் மொண்டு வந்து கைகாட்ட சொல்லி தூக்கி ஊற்றியவர் மறுநாள் காலை வழக்கம் போல வாத்தியாராய் வந்து பாடம் நடத்தினார் சாதிகள் இல்லையடி பாப்பா என்று… என்பது யதார்த்தத்தை காட்டுகிறது.
இதுவரை உன் கால் படாத நிலமென்று இங்கு வேலை செய்ய வந்தாயோ எழுந்து வா எம்மா இது சுடுகாடு! என்பது மனதில் வலியை கடத்துகிறது இன்னும் நிலமற்றவனை நினைக்கும் மழை காலம் தீர்த்துக் கொண்ட வழி அவரவர் வீட்டு வாசலில் போன்ற கவிதைகள் படித்து கணமாகும் கவிதைகளாய் உள்ளன படித்து பாருங்கள்.
“எல்லோரையும் நனைக்குமாம் மழை
அதிக நிலம் வைத்து இருப்பவனை அதிகமாகவும்
குறைவாக வைத்து இருப்பவனை குறைவாகவும்
நிலமற்றவனை வெறும் நனைத்து மட்டும் செல்கிறது “
இவ்வாறு நிலமற்றவர்களின் வலியை ஆழமாகப் புரியச் செய்கிறது இக்கவிதைத் தொகுப்பு.
– பேராசிரியர் இந்துமதி இள
நிலமற்றவனை நினைக்கும் மழை!
