“டி.எம்.சௌந்திரராஜன் மாதிரி பாடகர் மற்ற மாநிலங்களில் பிறந்திருந்தால், அவரை கொண்டாடி இருப்பார்கள். எவ்வளவோ சாதனைகளை திரை இசைத்துறையில் நிகழ்த்தியும் அவருக்கான சரியான அங்கீகாரத்தை நாம் தரவில்லை என்றுதான் சொல்லவேண்டும்” என்று அடிக்கடி சொல்வார் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ஆங்கிலத்துறையில், பேராசிரியராக இருந்தவரும் பல ஆங்கில நாடகங்களை நிகழ்த்தியவருமான பேராசிரியர் வசந்தன்.
என்னுடைய இளம் பருவத்திலிருந்து மதுரையில் கீழவாசல் அரசமரம் பிள்ளையார் கோவில் அருகில் ஆண்டுதோறும் நடக்கும் திருவிழாவுக்குப் பாடுவதற்காக வருவார் டி.எம்.எஸ்.
திரளாக மக்கள் கூடியிருப்பார்கள். மேடையில் வந்து அமர்ந்ததும் முதலில் பக்திப் பாடல் ஒன்றை, “உள்ளம் உருகுதய்யா…” என்றோ “கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்…” என்று துவங்கும் பாடலையோ, பாடிவிட்டு அடுத்து மக்களைப் பார்த்து, “இதோ நீங்க எதிர்பார்த்த பாடல்களையெல்லாம் தொடர்ந்து பாடப்போறேன் பாருங்க” என்று சிரித்தபடி அவர் சொன்னதும், அந்தக் கச்சேரியே களைகட்டிவிடும்.
பாடல்களுக்கிடையே டி.எம்.எஸ் சொல்லும் கமெண்ட்ஸ் தனி ரகமாக இருக்கும்.
பிரபலமான நடிகர்களுக்காக, “எப்படி உசுரக்குடுத்து பாடியிருக்கேன்.. பாருங்க” என்று சொன்னபடி பாடல்களைப் பாட ஆரம்பிப்பார்.
பெரும்பாலும் எம்ஜிஆர் பாடல்களை அதிகமாகப் பாடியிருக்கிறார்.
“தொட்டுவிட தொட்டுவிட தொடரும்…” என்கிற பாடலையோ, “நெருங்கி நெருங்கிப் பழகும்போது…” என்று துவங்கும் படப் பாடலையோ பாடும்போது, அவரது குரலே உற்சாக மயமாக இருக்கும்.
இரவு பத்துமணிக்குமேல் துவங்கும் கச்சேரி முடிய நள்ளிரவு ஒன்றரையைத் தாண்டிவிடும்.
அந்த மாதிரியான கச்சேரிகளுக்கு தவறாமல் போன அனுபவம் இருந்தாலும், பிரபல வார இதழுக்காக அவரை பேட்டி கண்டு அவரது சொந்த ஊரான மதுரைக்குச் சென்று அவருடைய உறவினர்கள் பலரையும் சந்தித்து பிரபல இதழில் நான் எழுதிய ‘நதிமூலம்’ கட்டுரை வெளிவந்தபோது தனி கவனம் பெற்றது.
மதுரை யானை மலைக்கு அருகில் வசித்துவந்த டிஎம்எஸின் சகோதரரை அவரது வீட்டில் பார்த்திருக்கிறேன்.
டி.எம்.எஸ் சகோதரது குரலும் டி.எம்.எஸ்ஸின் குரலின் சாயலைப் போலவே இருந்தது.
சென்னையில், நேரு ஸ்டேடியம் உட்பட பல இடங்களில் டி.எம்.எஸ் கலந்துகொண்ட இசைக் கச்சேரிகளை பார்த்திருக்கிறேன்.
ஒரு சமயம் பல இசை அமைப்பாளர்கள் சேர்ந்து பலரும் இணைந்து பாடப்பட்ட டி.எம்.எஸ்ஸின் “எங்கே நிம்மதி….” பாடலை ஏகப்பட்ட வயலின் பின்னணியில் நேரு ஸ்டேடியத்தில் ஒலித்தபோது திரளான மக்கள் நிரம்பிய அந்த அரங்கம் அமைதியாக சிறிது நேரமாயிற்று.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மறைந்ததையடுத்து, காமராஜர் அரங்கில் சிவாஜிக்காக ஒரு விழா எடுத்தார் வைகோ.
அந்த விழாவின்போது, சிவாஜிக்கு பெருமை சேர்த்த சில பாடல்களை டி.எம்.எஸ் பாடியபோது, அந்த அரங்கமே ஆரவாரமானது.
வசந்தமாளிகை திரைப்படத்தில் இடம்பெற்ற, “யாருக்காக…” பாடலை, அதே பாவத்துடன் அதே இருமலுடன் டி.எம்.எஸ் அழுத்தமாக பாயடிபோது, பயங்கர ‘அப்ளாஸ்’.
அதையடுத்து, உயர்ந்த மனிதன் திரைப்படத்தில் இடம்பெற்ற, “அந்த நாள் நியாபகம் நெஞ்சிலே வந்ததே…” என்ற பாடலை அவர் பாட ஆரம்பிக்கும் முன்பு பார்வையாளர்கள் வரிசையில் முன்னால் அமர்ந்திருந்த மேஜர் சுந்தராஜனை மேடைக்கு அழைத்தார்.
அந்தத் திரைப்படப் பாடலில், இடையிடையே மேஜர் சுந்தரராஜன் வசனங்கள் இடம்பெற்றிருக்கும். அதே வசனங்களை மீண்டும் அந்த மேடையில், மேஜர் பேச அந்த நாள் ஞாபகப் பாடலை, சிறிதும் பாவம் குறையாமல், டி.எம்.எஸ் பாடியபோது எதிரே அமர்ந்திருந்த சிவாஜி ரசிகர்கள் கைத்தட்டிக் கொண்டாடி விட்டார்கள்.
டி.எம்.எஸ்ஸின் இறுதிக்காலத்தில் அவரை மெரினா கடற்கரையில், மாலை நேரத்தில் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்திருந்தபோது, பார்த்தேன்.
ஏற்கனவே சந்தித்ததை நினைவுபடுத்தினேன். சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்.
“நான் ஒரு சித்தன். அப்படித்தான் இருந்துக்கிட்டுருக்கேன். ஆனா, இந்த உலகம் என்னைப் புரிஞ்சுக்கல” என்று அவர் பேசியபோது சற்று தூரத்தில் கடல் அலைகளின் இரைச்சல் பின்னணி இசையைப்போல ஒலித்தது.
கடைசிவரை தனக்கு சரியான அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்கின்ற ஆதங்கம் அவருடைய அழுத்தமான குரலில் வெளிப்பட்டுக் கொண்டே இருந்தது.
இதற்கு என்ன பதிலைச் சொல்வது?
அவரே பாடிய பாடலைத்தான் சொல்ல வேண்டும்..
“உன்னைச் சொல்லிக் குற்றமில்லை… என்னைச் சொல்லிக் குற்றமில்லை…”
– மணா
நான் வாழ யார் பாடுவார்? –
