கவிஞர்களின் காலச்சுவடு.

Estimated read time 1 min read

Web team

IMG_20240717_171923_501.jpg

கவிஞர்களின் காலச்சுவடு !
நூல் ஆசிரியர் கவிஞர் இளநகர் காஞ்சிநாதன் .
கவியரசு கண்ணதாசன் ,காவியக் கவிஞர் வாலி இருவரின் வரலாறு

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

பதிப்பு .ஜெயதாரணி அறக்கட்டளை .1784.லட்சுமி G.2 – HIG.பிரதான சாலை ,T.N.H.B.காலனி , வேளச்சேரி .சென்னை .42. விலை ரூபாய் 50.

நூல் ஆசிரியர் கவிஞர் இளநகர் காஞ்சிநாதன் .அவர்கள் மறைந்தும் மறையாத துருவ நட்சத்திரங்களான கவியரசு கண்ணதாசன் ,காவியக் கவிஞர் வாலி இருவரின் வரலாற்றை ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்பதுபோல ஒரு நூலில் எழுதி உள்ளார் .பாராட்டுக்கள் .நூலிற்கு மெல்லிசை மன்னர் எம் எஸ் .விஸ்வநாதன் அவர்களின் அணிந்துரை மிக நன்று .இருவரது வாழ்வில் நிகழ்ந்த முக்கிய நகழ்வுகளின் தொகுப்பாக நூல் உள்ளது .தினத்தந்தி நாளிதழில் பிரசுரமான வரலாற்றுச் சுவடுகள் ,மற்றும் வார இதழ்களில் பிரசுராமனவற்றை தொகுது நூலாக்கி உள்ளார் .

.கவியரசு கண்ணதாசன் 24.6.1927 அன்று பிறந்தார் என்று தொடங்கி அவரது வாழ்க்கை வரலாறு சுருக்கமாக சுவையாக எழுதி உள்ளார் .8 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர் உழைப்பால் திறமையால் உயர்ந்தார் .திருமகள் ,திரை ஒளி ,சண்ட மாருதம் போன்ற இதழ்களின் ஆசிரியராக இருந்தார் .” கலங்காதிரு மனமே ,உன் கனவெல்லாம் நினைவாகும் ஒரு தினமே.” என்று பாடல் எழுதி அவரது கனவை எல்லாம் நனவாக்கிய வரலாறு மிக நன்று .கவியரசு கண்ணதாசன் எழுதிய தத்துவப் பாடல்கள் பட்டியல் நூலில் உள்ளது .

போனால் போகட்டும் போடா .
இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா ?
————————————————–
வீ டுவரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ ?
————————————————–
மனிதன் மாறி விட்டான்
மதத்தில் எறி விட்டான்
—————————————————-
உன்னைச் சொல்லி குற்றமில்லை
————————————————–
கடவுள் மனிதனாக பிறக்க வேண்டும்
அவன் காதலித்து வேதனையில் வாட வேண்டும் .
—————————————————–
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
—————————————————-
மலர்ந்தும் மலராத பாதி மலர் போல
———————————————————
உள்ளம் என்பது ஆமை -அதில்
உண்மை என்பது ஊமை
——————————————————
பிறக்கும் போது அழுகின்றான் .
————————————————-
நிலவைப் பார்த்து வானம் சொன்னது
என்னை தொடதே .
———————————————-
இப்படி பாடல் வரிகளை படிக்கும்போதே நம் மனக்கண்ணில் காட்சிகளாக விரிந்து விடுகின்றன .
கவலை இல்லாத மனிதன் படம் எடுத்து நஷ்டப்பட்டு கவலைப்பட்ட வரலாறு உள்ளது .

“நோட்டெழுதி வாங்கிய கடனுக்கு
பாட்டெழுதி வாங்கிய பணம் போகத் தொடங்கியது .”
என்று சொன்னது .

அரசவைக் கவிஞரானது .மனைவிகள் ,குழந்தைகள் பெயர்கள் என் யாவும் விரிவாக நூலில் உள்ளன .
கவியரசு கண்ணதாசன் அவர்கள் 17.10.1981 அன்று இந்திய நேரப்படி 10.45 மணி .அமெரிக்க நேரப்படி பகல் 12 மணி க்கு இறந்தார் என்ற செய்தியை மிக துல்லியமாக எழுதி உள்ளார் .

“நிச்சயம் தன்னம்பிக்கை மட்டும் ஒரு மனிதன் வளர்த்துக் கொள்வானாகில் எந்தத்துறையாக இருந்தாலும் அதில் ஒரு சாதனையை படைக்க முடியும் என்பது உண்மை .”
இந்த வைர வரிகளோடு கவியரசு கண்ணதாசன் அவர்களைப் பற்றியப் பதிவு முடிகின்றது .

முத்தமிழ் அறக்கட்டளை நிறுவனரும் ,மதுரை தன்னம்பிக்கை வாசகர் வட்டம் ஒருங்கிணைப்பாளருமான அய்யா திருச்சி சந்தர் அவர்களின் பல்லாண்டு கால நண்பர் காவியக் கவிஞர் வாலி என்பதால் .திரு திருச்சி சந்தர் அவர்களின் மலரும் நினைவுகளும் ஒரு கட்டுரையாக நூலில் இடம் பெற்றுள்ளது .மிகச் சிறப்பு .

” அவர் உமிழ்ந்தது கவிதைச்சாரல்
என்னுடையது வெறும் காவிச்சாரல் .”

இருவருமே வெற்றிலை போடும் பழக்கம் உள்ளவர்கள் .

காவியக் கவிஞர் வாலி பற்றி நூல் ஆசிரியர் கவிஞர் இளநகர் காஞ்சிநாதன் .எழுதியுள்ள கவிதை மிக நன்று .

யுகக் கவிஞர் வாலி !

பரந்த நெற்றி
பதித்த குங்குமப் போட்டு
விரிந்த கண்கள் – புயல்
வீசும் காற்றென
தெரிக்கும் வார்த்தைகள்
வள்ளுவன் தாகூர் போல்
வளர்த்த தாடி
சிரித்த முகம்
முட்டை மூக்கில்
மூக்கு கண்ணாடி
வெற்றிலை போட்டு
சிவப்பேறிய நாக்கு
கத்தும் கடல் அலைமுதல்
கண்ணாடி வளையல் வரை
கவிதை பாடிடும் வள்ளல்
எங்கள் கவிஞர் வாலி !

இக்கவிதை படிக்கும் போதே நம் மனக் கண் முன் காவியக் கவிஞர் வாலி வந்து விடுகிறார் .இதுதான் ஒரு கவிஞரின் வெற்றி .நூல் ஆசிரியரின் வெற்றி .காவியக் கவிஞர் வாலி அவர்கள் 29.10.1931இல் பிறந்தார் என்று தொடங்கி ,தமிழக கோவில்களை எல்லாம் ஓவியத்தால் வரைந்த புகழ் பெற்ற ஓவியர் சில்பி அவர்களை வாலி சந்தித்து தான் வரைந்த ஓவியங்களை காட்டி மகிழ்ந்தது .பாரதியின் மகள் தங்கம்மாள் வாலி வரைந்த பாரதியார் ஓவியத்தைப் பார்த்து விட்டு பாராட்டி விட்டு அவர் சொன்ன ஆலோசனையின் பெயரில் .வாலியின் தந்தை கடன் வாங்கி சென்னை எழும்பூரில் உள்ள ஓவியக் கல்லூரியில் ஓவியம் பயின்றது .ஒரு வருடத்திலேயே படிப்பை பாதியில் விட்டு திருச்சிக்கு திரும்பியது .மேடை நாடகங்கள் ,வானொலி நாடகங்கள் எழுதியது .திரு .டி .எம் .சௌந்தர ராஜன் திரைப்படப் பாடல் எழுதிட சென்னைக்கு அழைத்தது இப்படி வாலியின் வரலாறை சுவையுடன் எழுதி உள்ளார் .

” பட்டுக்கோட்டையின் பாடல் என்னுள் பூசிக் கிடந்த சிறுகதை எழுதும் ஆசை ,ஓவியம் வரியும் ஆசை ,நாடகம் எழுதும் ஆசை அனைத்தையும் ஒரே நாளில் கழுவி விட்டது .”என்று வாலி பாடல் எழுதுவதில் மூழ்கியது .

சென்னை வந்தபின் பாடல் எழுத வாய்ப்புக் கேட்டு நடந்த பயணங்கள் .நடிகர் நாகேஷ் நட்பு .ஆரம்பத்தில் எம் .எஸ் .விஷ்வ நாதன் நிராகரிப்பு .பின் ஆதரிப்பு .
‘நல்லவன் வாழ்வான் ‘ படத்திற்கு கதை வசனம் அறிஞர் அண்ணா .வாலி எழுதிய பாடல் அண்ணாவிற்கு பிடித்து பாராட்டு .அந்தப் பாடல் ஒளிப்பதிவில் பல தடங்கல் .இந்தப்பாட்டு ராசியில்லாத பாட்டு என்று மருதகாசியை வைத்து வேறு பாட்டு எழுதி ஒளிப்பதிவு செய்யலாம் என்று மருதகாசியும் பாட்டெழுத வந்தார் .ஏற்கனவே வாலி எழுதிய பாடலை வாங்கி பார்த்தார் .

“இந்த பையன் நல்லா எழுதியிருக்கான் ,இவனுடைய வாழ்க்கை என்னால் கெட்டுப் போவதை நான் விரும்பவில்லை .இந்தப்பாட்டையே வைத்துக் கொள்ளுங்கள் .என்ற மருதகாசிக்கு மனதுக்குள் ஆலயம் எழுப்பி வழிபட்டேன் என்கிறார் வாலி .

காவியக் கவிஞரின் முத்தான பாடல்களின் பட்டியல் .அவர் திரைக்கதை எழுதிய பட்டியல் .நடித்த பட்ங்களின் பட்டியல் என யாவும் நூலில் உள்ளன .

அத்தையடி மெத்தையடி .
————————————————-
மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
—————————————————-
குமரிப் பெண்ணின் உள்ளத்திலே
குடியிருக்க வர வேண்டும் .
————————————————-
எனக்கொரு மகன் பிறப்பான்
———————————————-

15000 பாடல்களுக்கு மேல் எழுதியவர் .16 படங்களுக்கு திரைக்கதை எழுதியவர் .சில படங்களில் நடித்தவர் ஓவியர் என சகலகலா வல்லவனாகத் திகழ்ந்த வாலி வரலாறு .காலச்சுவடு .கவிதைச்சுவடு.
உடலால் இந்த உலகை விட்டு மறைந்தாலும் பாடல்களால் என்றும் வாழும் இரண்டு இலக்கிய இமயங்களின் பதிவு மிக நன்று .பாராட்டுக்கள்

Please follow and like us:

You May Also Like

More From Author