பெங்களூர் : மாநிலங்களவையில் சுற்றுச்சூழல் இணை அமைச்சர் கீர்த்தீ வர்தன்சிங், காற்று மாசுக்கும் நுரையீரல் நோய்களுக்கும் நேரடியான தொடர்பு இல்லை என்று தெளிவாகத் தெரிவித்துள்ளார்.
அவர், டிசம்பர் 18, 2025 அன்று மாநிலங்களவையில் எழுத்துபூர்வ பதிலில் கூறியதாவது: “உயர் காற்று தரக் குறியீடு (AQI) அளவுகளுக்கும் நுரையீரல் நோய்களுக்கும் நேரடி தொடர்பு இருப்பதை உறுதிப்படுத்தும் முழுமையான தரவுகள் இல்லை” என்றும், “காற்று மாசு நுரையீரல் நோய்களை நேரடியாக உருவாக்குவதாகக் கூறுவதற்கு போதுமான அறிவியல் ஆதாரங்கள் இல்லை” என்றும் வலியுறுத்தினார்.
இருப்பினும், காற்று மாசு சுவாசத் தொடர்பான நோய்களைத் தூண்டும் ஒரு காரணியாக இருக்கலாம் என்பதை அமைச்சர் ஏற்றுக்கொண்டார். இதனால், நுரையீரல் நார்மைசை (lung fibrosis), நாள்பட்ட அடைபடும் நுரையீரல் நோய் (COPD), emphysema போன்றவற்றைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், தேசிய காற்று மாசு கட்டுப்பாட்டு திட்டம், காற்று மாசு மேலாண்மை திட்டம், தகவல் பரிமாற்றம், பயிற்சி திட்டங்கள் மற்றும் தேசிய காலநிலை மாற்றம் மற்றும் மனித ஆரோக்கிய திட்டம் (NPCCHH) உள்ளிட்டவற்றின் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாகவும் குறிப்பிட்டார்.
இந்த அறிக்கை, தில்லி உள்ளிட்ட பல நகரங்களில் காற்று மாசு கடுமையான அளவை எட்டியுள்ள நிலையில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் வெளியிடப்பட்டது. இதற்கு சில மருத்துவர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் ஆய்வாளர்கள் மத்தியில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
மேலும், உலக சுகாதார அமைப்பு (WHO) உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் காற்று மாசு நுரையீரல் நோய்கள், இதய நோய்கள், புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பாதிப்புகளுக்கு முக்கிய காரணியாக இருப்பதாகத் தொடர்ந்து எச்சரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
