அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற முழக்கத்துடன் தமிழகம் முழுவதும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். சட்டமன்றத் தொகுதிகள் வாரியாக அவர் மேற்கொண்டு வரும் இந்தப் பயணத்தின் அடுத்தகட்ட அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, வருகிற டிசம்பர் 28-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் அவர் தனது சூறாவளி பிரசாரத்தை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார்.
இந்த பயணத் திட்டத்தின்படி, டிசம்பர் 28-ஆம் தேதி திருப்போரூர் மற்றும் சோழிங்கநல்லூர் பகுதிகளிலும், 29-ஆம் தேதி திருத்தணி மற்றும் திருவள்ளூர் பகுதிகளிலும் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்கிறார். இறுதி நாளான 30-ஆம் தேதி கும்மிடிப்பூண்டியில் தனது பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.
இதற்கான சிறப்பான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று அந்தந்த மாவட்ட நிர்வாகிகளுக்கு அதிமுக தலைமை அறிவுறுத்தியுள்ளது.
