டென்மார்க்கின் சுயாட்சிப் பிரதேசமான கிரீன்லாந்தை அமெரிக்காவிடம் விற்பனை செய்ய மறுக்கும் ஐரோப்பிய நாடுகள் மீது, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதிய வரி விதிப்புகளை அறிவித்து உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
கடந்த சனிக்கிழமை (ஜன. 17) தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் பதிவிட்டுள்ள அவர், கிரீன்லாந்தை அமெரிக்காவிடம் ஒப்படைப்பதற்கான ஒப்பந்தம் எட்டப்படும் வரை, டென்மார்க், பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, பின்லாந்து உள்ளிட்ட 8 ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் வரும் பிப்ரவரி 1 முதல் 10% கூடுதல் வரி விதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். மேலும், ஜூன் 1-ஆம் தேதிக்குள் இதில் முன்னேற்றம் இல்லையெனில், இந்த வரி விதிப்பு 25 சதவீதமாக உயர்த்தப்படும் என்றும் அவர் திட்டவட்டமாக எச்சரித்துள்ளார்.
“அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து மிகவும் அவசியம்; பல தசாப்தங்களாக ஐரோப்பிய நாடுகளுக்கு அமெரிக்கா மானியம் வழங்கி வரும் நிலையில், இப்போது அவர்கள் கிரீன்லாந்தைக் கொடுத்து அதற்குப் ஈடுகட்ட வேண்டும்” என டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவின் இந்த மிரட்டலுக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, இது ஒரு ‘ஆபத்தான வர்த்தகப் போர்’ எனச் சாடியுள்ளன.
