சீனா தன் கட்டுப்பாட்டில் உள்ள திபெத் மாகாணத்தில் பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே, உலகிலேயே மிகப்பெரிய நீர்மின் (Hydropower) அணையை கட்டும் பணியை அதிகாரப்பூர்வமாக துவக்கியது.
இந்த அணைக்கான முதலீடு மட்டும் ரூ.14 லட்சம் கோடியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேடோங் மாவட்டத்தில் அமைக்கப்படும் இந்த அணை, இந்திய எல்லையிலிருந்து வெறும் 50 கிலோமீட்டர் தொலைவில் மட்டுமே உள்ளது என்பது முக்கியமான விஷயமாகும். இதற்கான திட்டத்தினை சீன பிரதமர் லி குயாங் நேற்று உறுதிப்படுத்தினார்.
இந்த அணை இந்தியாவுக்கு பாதுகாப்பு ரீதியாக பெரும் அச்சுறுத்தலாக இருக்கக்கூடும் என நாட்டு வல்லுநர்களும், அரசியல்வாதிகளும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
அருணாச்சலுக்கு மிக அருகில் இருப்பதால், “இந்த அணையை சீனா ஒரு நீர்வெடிகுண்டாக பயன்படுத்த வாய்ப்பு உள்ளது” என அந்நிலையின் முதல்வர் பெமா காண்டு கடந்த வாரம் கடுமையாக எச்சரித்திருந்தார்.
பிரம்மபுத்திரா நதி திபெத்தில் “யார்லுங்சாங்போ” என அழைக்கப்படுகிறது. இந்த நதி இந்தியாவின் அருணாச்சல் மற்றும் அசாம் வழியாக வங்காள விரிகுடாவை அடைகிறது என்பதால், அதன் மீது சீனா கட்டும் அணை இந்தியாவின் நீர் பாதுகாப்பிற்கும், சுற்றுச்சூழலுக்கும் பெரும் ஆபத்தை உருவாக்கும் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.