தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு போன்ற பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்தத் தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக மற்றும் அமமுக ஆகிய கட்சிகள் இணைந்து பலமான கூட்டணியை அமைத்துள்ளன.
இந்நிலையில், மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 109-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அப்போது கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, வரும் தேர்தலில் அதிமுக கூட்டணி 210-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அமோக வெற்றி பெற்று, அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
திமுக கூட்டணி தற்போது தடுமாற்றத்தில் இருப்பதாகவும், கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுகவினர் சுமார் 4 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் செய்துள்ளதாகவும் அவர் கடுமையாகக் குற்றம் சாட்டினார். மேலும், இந்தத் தேர்தலோடு தமிழகத்தில் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
திமுக அரசின் ஆட்சிக்காலம் இன்னும் இரண்டு மாதங்களில் முடியப் போவதால்தான், அவசர அவசரமாகப் புதிய திட்டங்களை அறிவித்து வருவதாகச் சாடிய அவர், தமிழகத்தில் தற்போது பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்றும் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாகவும் கவலை தெரிவித்தார்.
வெளிமாநிலத் தொழிலாளர்களுக்குக் கூட இங்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாகக் குறிப்பிட்ட அவர், இந்தியாவிலேயே மிக மோசமான ஆட்சி தமிழகத்தில்தான் நடப்பதாகத் தனது உரையில் விமர்சித்தார்.
