தேர்தலுக்காக கூட தமிழ்நாட்டிற்கு பெரிய திட்டங்களை அறிவிக்க மோடி அரசு முன்வரவில்லை- ஜோதிமணி

Estimated read time 0 min read

தேர்தலுக்காகக் கூட தமிழ்நாட்டிற்கு பெரிய திட்டங்கள் எதையும் அறிவிக்க மோடி அரசு முன்வரவில்லை என காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக ஜோதிமணி தனது எக்ஸ் தளத்தில், “கடந்த முறை ஒன்றிய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டபோது அது பீகார் நிதிநிலை அறிக்கை போல இருந்தது. அடுத்த சில மாதங்களில் பீகார் மாநில சட்டமன்றத் தேர்தல் நடக்க இருந்தது. இன்னும் சில மாதங்களில் தமிழ்நாடு,கேரளா,மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. அதுகுறித்த அறிகுறிகூட இன்றைய நிதிநிலை அறிக்கையில் இல்லை. தேர்தலுக்காகக் கூட தமிழ்நாட்டிற்கு பெரிய திட்டங்கள் எதையும் அறிவிக்க மோடி அரசு முன்வரவில்லை. இந்த மாநிலங்களில் பாஜகவிற்கு வெற்றி சாத்தியமில்லை என்பதை பாஜக உணர்ந்தே இருக்கிறது.

நாட்டில் வேலை வாய்ப்பின்மை,விலைவாசி உயர்வு,விவசாயம்,சிறு,குறு நடுத்தர தொழில்களின் நலிவு, டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவு சரிவு ( இன்றைய பிரதமரின் வயதை விட அதிகமாக உள்ளது!) உள்ளிட்ட பிரச்சினைகளைத் தீர்க்க ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் எவ்வித தொலைநோக்குத் திட்டங்களோ, பெரிய மாறுதல்களை ஏற்படுத்தக் கூடிய சிந்தனைகளோ இல்லை. பெண்களுக்கு மாவட்டந்தோறும் விடுதி என்று அறிவிப்பு வரவேற்புக்குரியது. இதை தமிழ்நாடு அரசு தோழி விடுதி என்ற பெயரில் ஏற்கனவே நடைமுறைப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப்பிரதேசம் ,ஒடிசா மாநிலங்களின் இயற்கை வளங்களைக் குறிவைத்து அரிய வகை கனிம காரிடார் அறிவிக்கப்பட்டுள்ளதை மிக எச்சரிக்கையோடு அணுக வேண்டியுள்ளது. மொத்தத்தில் ஒன்றிய நிதிநிலை அறிக்கை ஏமாற்றமளிக்கக்கூடியது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

More From Author