ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியிறவுத்துறை உசைன் அமிர் அப்துல்லாஹியான் உள்ளிட்டோரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
ஈரான் நாட்டின் அதிபர் இப்ராஹிம் ரைசி, அண்டை நாடான அஜர்பைஜானில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று விட்டு ஹெலிகாப்டர் மூலம் ஈரான் திரும்பிக் கொண்டிருந்தார். அவருடன், வெளியுறவுத்துறை அமைச்சர் உசைன் அமிர் அப்துல்லாஹியான், கிழக்கு அஜர்பைஜான் ஆளுநர் மாலிக் ரஹ்மத் உள்ளிட்ட பலர் பயணித்தனர்.
ஜோல்பா நகருக்கு அருகே பறந்துக் கொண்டிருந்தபோது ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என கருதப்படுகிறது.
ஹெலிகாப்டரில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்ததாக ஈரான் நாட்டு ஊடகங்கள் அறிவித்துள்ளன. அந்நாட்டு விதிகளின்படி, துணை அதிபர் முகமது முக்பர் புதிய அதிபராகப் பொறுப்பேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரான் அதிபரின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர்மோடி, அவரது மறைவு அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளித்துள்ளதாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்தியா-ஈரான் இடையிலான உறவை வலுப்படுத்தியதில், இப்ராஹிம் ரைசியின் பங்களிப்பு எப்போதும் நினைவுக்கூரப்படும் என்றும், அவரது குடும்பத்தினருக்கும், ஈரான் மக்களுக்கும் தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார். இந்த துயரமான நேரத்தில் இந்தியா ஈரானுடன் துணை நிற்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.