தேர்தல் அதிகாரிகளால் உங்கள் வீட்டிற்கே வந்து வழங்கப்படும் பூத் ஸ்லிப்பையும் எடுத்து செல்ல வேண்டும். இதில் உங்களின் பாகம் எண், வரிசை எண் ஆகியவை இருக்கும் என்பதால், கூட்டத்தில் நிற்காமல் உங்கள் வாக்குச்சாவடி அறையை எளிதாக கண்டறிய இது உதவும்.
ஒருவேளை உங்களிடம் வாக்காளர் அட்டை தொலைந்துவிட்டாலோ அல்லது கைவசம் இல்லையென்றாலோ, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட மாற்று ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை கட்டாயம் கொண்டு செல்ல வேண்டும். உதாரணமாக ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, பாஸ்போர்ட், புகைப்படத்துடன் கூடிய வங்கி பாஸ்பு அல்லது ஸ்மார்ட் ரேஷன் கார்டு கொண்டு செல்லலாம்.
நீங்கள் எந்த அடையாள ஆவணத்தை கொண்டு சென்றாலும், அதன் அசலை மட்டுமே கையில் கொண்டு செல்ல வேண்டும். செல்போனில் உள்ள டிஜிட்டல் ஆவணங்களையோ அல்லது ஜெராக்ஸ் நகல்களையோ வாக்குச்சாவடியில் உள்ள அதிகாரிகள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
தேர்தல் பொதுவாக சுட்டெரிக்கும் கோடை வெயிலில் நடைபெறுவதால், வரிசையில் நீண்ட நேரம் நிற்க நேரிடலாம். எனவே, சோர்வடையாமல் இருக்க குடிநீர் பாட்டில் மற்றும் வெயிலிலிருந்து தற்காத்துக்கொள்ள ஒரு குடை அல்லது தொப்பி ஆகியவற்றை எடுத்து செல்வது நல்லது. பார்வை குறைபாடு உள்ளவர்கள் மற்றும் முதியவர்கள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் உள்ள வேட்பாளர்களின் பெயர்கள் மற்றும் சின்னங்களை தெளிவாகப் பார்க்க தங்களின் கண்ணாடியை கட்டாயம் கொண்டு செல்ல வேண்டும்.
வாக்குச்சாவடி மையத்திற்குள் செல்போன், ஸ்மார்ட் வாட்ச் மற்றும் கேமரா ஆகியவற்றை எடுத்து செல்ல இந்தியத் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. எனவே அவற்றை வீட்டிலேயே அல்லது பாதுகாப்பான இடத்தில் வைத்துவிட்டு செல்லவும்.
