ஜாலியாக டூர் போன 20 பேர்…! சட்டென வெடித்து சிதறிய எரிமலை

Estimated read time 1 min read

இந்தோனேசியாவின் ஹல்மஹேரா தீவில் உள்ள மவுண்ட் டுகோனோ எரிமலை திடீரென வெடித்துச் சிதறியதில், தடையை மீறி மலையேற்றத்தில் ஈடுபட்ட 3 வீரர்கள் உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களில் இருவர் சிங்கப்பூரைச் சேர்ந்தவர்கள், ஒருவர் இந்தோனேசியர் என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். சுமார் 1,355 மீட்டர் உயரமுள்ள இந்த எரிமலை கடந்த சில நாட்களாகவே அதிக சீற்றத்துடன் காணப்பட்டதால், அதன் பள்ளத்தைச் சுற்றியுள்ள 4 கிலோமீட்டர் தூரத்திற்குச் செல்லக் கடுமையான தடை விதிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், சமூக வலைதளங்களில் பதிவிடுவதற்காக ‘கண்டென்ட்’ எடுக்கும் நோக்கில், கடந்த வியாழக்கிழமை சுமார் 20 பேர் கொண்ட குழுவினர் தடையை மீறி மலையேற்றத்தைத் தொடங்கியுள்ளனர்.

வெள்ளிக்கிழமை காலை 7:41 மணியளவில் எரிமலை பயங்கர சத்தத்துடன் வெடித்தது. சுமார் 16 நிமிடங்கள் நீடித்த இந்தச் சீற்றத்தின்போது, வானத்தை நோக்கி 10 கிலோமீட்டர் உயரத்திற்கு கரும்புகையும் சாம்பலும் வெளியேறியது. இந்த விபத்தில் சிக்கியவர்களில் 14 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். மீட்கப்பட்டவர்களில் 5 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மலையிலிருந்து இறங்க முடியாமல் தவிப்பவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

எரிமலை வெடித்தபோது சுற்றுலாப் பயணிகள் மரண பீதியில் மலையிலிருந்து கீழே ஓடி வரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. “ஓ… அவர்கள் இறந்துவிட்டார்கள், கடவுளே!” என்று மக்கள் அலறும் சத்தமும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

தற்போது எரிமலை சீற்றம் தொடர்ந்து நீடிப்பதால், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக வட ஹல்மஹேரா காவல்துறைத் தலைவர் எர்லிக்சன் பாசரிபு தெரிவித்துள்ளார். 1933-ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாகச் செயல்பட்டு வரும் இந்த எரிமலை, கடந்த மார்ச் மாதம் முதல் நாளொன்றுக்குச் சராசரியாக 95 முறை சிறிய அளவில் வெடித்து வருகிறது.

பசிபிக் ‘நெருப்பு வளைய’ பகுதியில் அமைந்துள்ள இந்தோனேசியாவில் 120-க்கும் மேற்பட்ட எரிமலைகள் உள்ளன. தற்போதைய சூழலில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் யாரும் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் நுழைய வேண்டாம் என்று அந்நாட்டு புவியியல் ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author