நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி நீர்ப்பிடிப்பு பகுதியில் இன்று ஜீரோ டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் தொடங்கி பிப்ரவரி மாதம் வரை பனிப்பொழிவு இருக்கும். டிசம்பர் மாதத்தில் அதிகளவில் பனிப்பொழிவு காணப்படும். ஆனால், காலநிலை மாறுபாடு காரணமாக, இந்த ஆண்டு பனிப்பொழிவு தாமதமாக தொடங்கியது.
கடந்த சில நாட்களாக நீலகிரியில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. குறிப்பாக, ஊட்டியில் புல் மைதானங்கள், தாவரவியல் பூங்கா, குதிரை பந்தய மைதானம் உள்ளிட்ட இடங்களில் நீர் பனிப்பொழிவு அதிகரித்து காணப்படுகிறது.
இந்நிலையில், அவலாஞ்சி நீர்ப்பிடிப்பு பகுதியில் இன்று ஜீரோ டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. மேலும், தலைகுந்தாவில் 1 டிகிரி செல்சியஸ் மற்றும் உதகை தாவரவியல் பூங்காவில் 2.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. இதன் காரணமாக, உறைபனி மற்றும் நீா்ப்பனியின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.
இரவில் தொடங்கும் கடும் பனிப்பொழிவு, காலை வரை நீடிக்கிறது. இதனால், காலையில் பள்ளிகள் மற்றும் பணிக்கு செல்வோர் கடும் சிரமப்பட்டனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை குளிரின் தாக்கத்தால், நடுங்கி வருகின்றனர்.
உறைபனி தாக்கம் அதிகரித்துள்ளதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடுங்குளிரை போக்க பொதுமக்கள் ஆங்காங்கே நெருப்பு மூட்டி குளிர் காய்ந்து வருகிறார்கள்.