90-களில் பிறந்த மில்லினியல் தலைமுறையினரை விட, தற்போதைய ‘ஜென்-சி’ தலைமுறையினரின் அறிவுத்திறன் மற்றும் கவனிக்கும் திறன் குறைந்து வருவதாக சமீபத்திய ஆய்வில் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.
நரம்பியல் விஞ்ஞானி ஜாரெட் ஹோர்வத் நடத்திய இந்த ஆய்வின்படி, முந்தைய தலைமுறையை விட அடுத்த தலைமுறையினரின் ஐகியூ அளவு அதிகமாக இருக்கும் என்ற ‘பிளைன் விளைவு’ கோட்பாடு தற்போது தலைகீழாக மாறியுள்ளது.
இதற்கு முக்கிய காரணமாக, தற்போதைய இளைஞர்களிடம் அதிகரித்துள்ள டிஜிட்டல் சாதனங்களின் பயன்பாடு மற்றும் சமூக ஊடக மோகம் ஆகியவை சுட்டிக்காட்டப்படுகின்றன.
இவை ஆழமாகச் சிந்திக்கும் திறனையும், ஒரு விஷயத்தில் நீண்ட நேரம் கவனம் செலுத்தும் ஆற்றலையும் வெகுவாகப் பாதித்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இருப்பினும், இந்த ஆய்வில் ஜென்-சி தலைமுறையினரின் நேர்மறையான சில மாற்றங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. அறிவுத்திறன் மற்றும் கவனச்சிதறல் போன்ற சவால்கள் ஒருபுறம் இருந்தாலும், பழக்கவழக்கங்களில் இவர்கள் முந்தைய தலைமுறையினரை விட ஆரோக்கியமான பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளனர். 90-களில் பிறந்தவர்களுடன் ஒப்பிடுகையில், ஜென்-சி தலைமுறையினர் மது அருந்தும் பழக்கத்தில் குறைவான ஈடுபாடே கொண்டுள்ளனர்.
இந்நிலையில் புள்ளிவிவரங்களின்படி, 2000-களின் தொடக்கத்தில் இருந்த மதுப்பழக்கத்தின் சதவீதம் தற்போது கணிசமாகக் குறைந்துள்ளதைக் காண முடிகிறது. அறிவுத்திறன் வீழ்ச்சி கவலையளித்தாலும், சமூகப் பழக்கவழக்கங்களில் ஏற்பட்டுள்ள இந்த ஆரோக்கியமான மாற்றம் ஒரு நல்ல அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது.
