அமெரிக்காவின் கெண்டக்கி மாகாணத்தில் 1809-ம் ஆண்டு பிப்ரவரி 12 அன்று பிறந்தார் ஆபிரகாம். இவரது தந்தை தாமஸ் லிங்கன் இங்கிலாந்தில் இருந்து அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தவர். தாய் நான்சி உடல் மெலிந்து நோயுற்றவராக இருந்தார். இவருக்கு சாரா எனும் சகோதரி, தாமஸ் எனும் சகோதரர். தாமஸ் சிறு வயதிலேயே இறந்துவிட்டார். ஒன்பதாவது வயதில் தனது தாயை இழந்தார் ஆபிரகாம்.
பின்னர் தாமஸ் கைம்பெண்ணான சாரா புஷ் ஜான்ஸ்டனை மறுமணம் செய்துகொண்டார். அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள், ஒரு ஆண் குழந்தை இருந்தது. புத்தகம் வாசிப்பதை வேட்கையாகக் கொண்டிருந்தார் ஆபிரகாம். அதற்கு உறுதுணையாக இருந்தவர் சாரா. அவரைத் தனது ‘தேவதைத் தாய்’ என்றே குறிப்பிட்டிருக்கிறார் ஆபிரகாம்.
விவசாயி, கூலி வேலையாள் என்று உடலுழைப்பு சார்ந்து பல பணிகளைச் செய்தபோதும் மக்களுக்குச் சேவையாற்ற வேண்டுமென்ற எண்ணம் இளம் வயதில் ஆபிரகாம் மனதில் துளிர்விட்டது. அதற்கேற்பத் தேர்தல்களில் போட்டியிடுகிற விருப்பத்தையும் அவர் செயல்படுத்தி வந்தார். அதில் பெரிதாக வெற்றிகளைப் பெறவில்லை. அரசியல், வர்த்தகம் என்று தான் நினைத்தவற்றில் வெற்றிகளைப் பெறாதபோதும், அவரது தொடர்ச்சியான செயல்பாடும் தன்னம்பிக்கையும் வளர்ச்சியைப் பெற்றுத் தந்தது.
ஒருகட்டத்தில் அதிபர் தேர்தலில் போட்டியிடுகிற நிலைக்கும் உயர்த்தியது. அதிலும் அவருக்குத் தோல்வியே கிடைத்தது. ஆனாலும், மீண்டும் போராடி தனது வெற்றியை 1861-ல் நிலைநாட்டினார்.
தேர்தலில் போட்டியிட்டபோது, அமெரிக்காவில் அடிமைகளாக வரவழைக்கப்பட்ட கறுப்பின மக்களின் விடுதலையை அவர் தனது உறுதிமொழிகளால் ஒன்றாக முன்வைத்தார். முந்தைய தேர்தலில் அவரைத் தோற்கடிக்க எதிர்த்தரப்பு முயற்சித்ததற்கும் அதுவே முதன்மைக் காரணமாக இருந்தது. ஆனால், இம்முறை அதுவே அவரை அமெரிக்காவின் 16-வது அதிபராக ஆக்கியது.
அந்த காலகட்டத்தில் அமெரிக்காவின் தெற்குப்பகுதியில் இருந்த சில மாகாணங்கள் ‘அடிமைகள் விடுதலை’ முழக்கத்தை எதிர்த்து ஒன்றிணைந்தன. அவற்றைத் தேசத்தோடு இணைக்கப் போரிட வேண்டியிருந்தது. நான்காண்டுகள் நீடித்த இந்தப் போர் 1865-ல் முடிவுக்கு வந்தது.
அதற்கடுத்த வாரமே, ஒரு நாடக அரங்கில் ஆபிரகாம் லிங்கனை ஜான் வில்க்ஸ் பூத் என்பவர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். அடிமை முறை ஆதரவாளர்களில் அவரும் ஒருவர் என்பது பின்னர் விசாரணையில் தெரிய வந்தது.
பிறப்பு முதல் இறப்பு வரை எத்தனையோ தோல்விகளைச் சந்தித்தபோதும், மனம் தளராமல் போராடி வென்ற மாமனிதராகவே அடையாளம் காணப்படுகிறார் ஆபிரகாம் லிங்கன்.
1863-ல் உள்நாட்டுப்போர் நடைபெற்றபோது, கெட்டிஸ்பெர்க் எனுமிடத்தில் லிங்கனின் படைகளைச் சேர்ந்த பலர் மடிந்தனர். அவர்களது நினைவிடத்தில் அவர் ஆற்றிய உரையானது, இன்றும் மக்களிடையே சமத்துவத்தை விரும்புபவர்களுக்குத் தோள் கொடுப்பதாக உள்ளது. அதுவே, 1864-ல் நடைபெற்ற அதிபர் தேர்தலில் அவரை மீண்டும் வெற்றி பெற வைத்தது.
சூழல் எத்தனை மோசமானதாக இருந்தாலும், சந்திக்கிற மனிதர்கள் பெரிதாக உறுதுணையாக இல்லாதபோதும், மனதை வாட்டுகிற அளவுக்குத் தனிப்பட்ட பிரச்சனைகள் இருந்தபோதும், சிந்தனைப்பாதையைச் சிகரம் நோக்கித் திருப்புவதென்பது அசாத்தியமான காரியம். அது, அவரைத் தொடர்ந்து பின்னே வருபவர்களுக்கு இன்று ஒரு பாடமாக இருக்கிறது.
ஆபிரகாம் லிங்கனைப் பற்றிய தகவல்கள், கட்டுரைகள், புத்தகங்கள் உலகம் முழுக்க மக்களால் விரும்பிப் படிக்கப்படுகின்றன. குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கையூட்டக் கதைகளாகச் சொல்லச் சொல்லப்படுகின்றன.
“ஒரு மரத்தை வெட்டிச் சாய்க்க ஆறு மணி நேரம் தரப்பட்டால், அதில் நான்கு மணி நேரத்தை எனது கோடாரியைக் கூர்மைப்படுத்தப் பயன்படுத்துவேன்”, “முயற்சி இல்லையென்றால் வெற்றி இல்லை”, ”எனக்கான நேரம் வரும் என்ற நம்பிக்கையில் என்னைத் தயார் செய்துகொண்டே இருக்கிறேன்”, ”சிறந்த எதிர்காலத்தைக் கணிப்பதைவிட, உருவாக்குவதே மிகச்சிறப்பானது” என்பது உட்படப் பல வாக்கியங்கள் அவரால் முன்மொழியப்பட்டவை.
அதற்கு முன்னரும் அவற்றைப் பலர் சொல்லியிருக்கக்கூடும். ஆனால், ஆபிரகாம் லிங்கனிடம் இருந்து வெளிப்பட்டதால் அவை சிறப்பானவையாக மாறியிருக்கின்றன.
இன்று ஆபிரகாம் லிங்கனின் 217-வது பிறந்ததினம். அவரை நினைவுகூர்வதைக் காட்டிலும், அவரது வரலாற்றின் சில பக்கங்களை நாம் அறிந்துகொள்வதே அவருக்குச் செலுத்துகிற சரியான மரியாதையாக அமையும்.
ஏனென்றால், வறிய நிலையில் இருந்து வலிமையான இடம் நோக்கி முன்னேறியபிறகும் தன்னிலை மாறாமல் பிறரைத் தனக்கும் சமமாகக் கருதி வாழ்ந்ததில், அப்படியான நிலை நோக்கிச் சக மனிதர்கள் உறுதியாகத் தமது காலடியை எடுத்துவைக்க உதவுவதில், அவர் ஒரு சிறந்த முன்மாதிரி..!
– ரோகிணி
