சிவகாசி அருகே மாரனேரி கிராமத்தில் தியாகி இமானுவேல் சேகரனின் 68-வது குருபூஜை விழா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்ச்சியில் சிவகாசி சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் அரசன் அசோகன், பாமக மாநிலப் பொருளாளர் திலகபாமா உள்பட அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகளும் பங்கேற்று அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பாமக மாநிலப் பொருளாளர் திலகபாமா, “சிவகாசி மாநகராட்சியில் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது?அதற்குரிய செலவினங்கள் எவ்வளவு? என்பது குறித்த வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். சட்ட ரீதியாக இன்றைய தினம் பாமக அன்புமணி வசம் தான் உள்ளது.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஒரு நடிகராக இருப்பதால் அவரின் ரசிகர்களாகிய தொண்டர்கள் அவர் அருகே செல்ல வேண்டும், அவரைத் தொட்டுப் பார்க்க வேண்டுமென உணர்ச்சிவசப்படுகின்றனர். தமிழக மக்கள் தற்போதுள்ள அரசியல் கட்சிகள் வேண்டாம் என்ற முடிவில் உள்ளனர். அடுத்தது தங்களுக்கு யார் வேண்டுமென்ற தேடலில் உள்ளனர்.
விஜய் சினிமா நடிகர் என்பதால் தமிழக வெற்றி கழகம் அரசியலை நோக்கி நகர்ந்து சென்று கொண்டிருக்கும் நிலையில், அன்புமணியின் நடைபயணம் மக்களின் வாக்குகள் மானாவாரியாக போய்விடக் கூடாது என யோசிக்க வேண்டும் என்பதை உருவாக்கி வருகிறது. தமிழகத்தின் மண் சார்ந்த தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளை அரசுப் பாடப் புத்தகங்கள் வாயிலாக அடுத்த தலைமுறை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதை எடுத்துச் செல்வோம்” என்றார்.