“JEE முதன்மை தேர்வில் தமிழக அரசு மாதிரி பள்ளிகளில் படித்த 448 பேர் தேர்ச்சி”- கல்வித்துறை

Estimated read time 1 min read

பள்ளிக்கல்வித்துறையால் நடத்தப்படும் அரசு மாதிரிப்பள்ளிகளில் படித்த 448 மாணவர்கள் ஜேஇஇ முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்திரமோகன் தெரிவித்துள்ளார்.

பிஇ, பிடெக் பொறியியல் படிப்பில் ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான ஜேஇஇ முதல்கட்ட முதன்மைத் தேர்வு முடிவுகளை பிப்ரவரி 16ம் தேதி தேசிய தேர்வு முகமை வெளியிட்டது. இந்தியாவில் உள்ள ஐஐடி, என்ஐடி போன்ற ஒன்றிய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை பிஇ, பிடெக் படிப்பில் சேர ஜேஇஇ தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

இவை ஜேஇஇ முதன்மைத் தேர்வு, அட்வான்ஸ் தேர்வு என 2 பிரிவாக நடைபெறுகிறது. தேசிய தேர்வு முகமை மூலம் ஆண்டுதோறும் 2 கட்டங்களாக முதன்மைத் தேர்வை நடத்தப்படுகிறது.

அதன்படி 2026-27-ம் கல்வியாண்டுக்கான முதல்கட்ட முதன்மை தேர்வு நாடு முழுவதும் 658 மையங்களில் கடந்த ஜனவரி 21 ,22,23, மற்றும் 28 ஆகியத் தேதிகளில் நடைபெற்றது.

இந்தத் தேர்வுக்கு 13, 55, 293 பேர் விண்ணப்பித்ததில், 13,04, 653 பேர் தேர்வில் கலந்துகொண்டனர். தமிழ், தெலுங்கு, கன்னடம் ,மலையாளம் உள்ளிட்ட 13 மாெழிகளில் தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு முடிவுகள் பிப்ரவரி 16்ம் தேதி https://jeemain.nta.nic.in/ என்ற இணையதளத்தில் வெளியானது. இந்த தேர்வில், தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறையால் நடத்தப்படும் அரசு மாதிரிப்பள்ளிகளில் படித்த 448 மாணவர்கள் முதன்மைத் தேர்வில் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர் என பள்ளிக்கல்வித்துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சந்திரமோகன் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்ட மாதிரிப் பள்ளியில் படித்த மாணவர் பிரவீன் 99.53 மதிப்பெண்களும், நரேஷ் 99.50 மதிப்பெண்களும், ராணிப்பேட்டை மாவட்ட மாதிரிப் பள்ளியில் படித்த வேல்முருகன் 99.42 மதிப்பெண்களும் பெற்றுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை செயலர் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

மேலும் அந்த செய்திக்குறிப்பில், கடந்த நான்கு ஆண்டுகளில், அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 2,358 மாணவர்கள் 50 துறைகளில் இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் (IIT), தேசிய சட்டப் பல்கலைக்கழகங்கள் (NLU) மற்றும் தேசிய பேஷன் தொழில்நுட்ப நிறுவனம் (NIFT) உட்பட 93 முதன்மையான நிறுவனங்களில் சேர்க்கை பெற்றுள்ளனர். தற்போது, 41 மாணவர்கள் ஐஐடி-களில் படிப்பைத் தொடர்கின்றனர். மேலும், 17 மாணவர்கள் ஜப்பான், தைவான் மற்றும் மலேசியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ்நாடு அரசின் முழு நிதி உதவியுடன் சேர்ந்துள்ளனர். 2021 ஆம் ஆண்டு மாதிரிப் பள்ளிகள் தொடங்கப்பட்டதிலிருந்து, 39,044 மாணவர்கள் இந்த நிறுவனங்களில் படித்து உயர்கல்வி நோக்கி முன்னேறியுள்ளனர். தேசிய அளவில் முன்னணி கல்வி நிறுவனங்கள் மற்றும் உலகளாவிய பல்கலைக்கழகங்களில் அரசுப் பள்ளி மாணவர்கள் சேருவதை உறுதி செய்யும் தொலைநோக்குப் பார்வையுடன் மாதிரிப் பள்ளி அறிமுகப்படுத்தப்பட்டது. கல்வி ரீதியாக பின்தங்கிய 10 மாவட்டங்களில் நிறுவப்பட்டு, பின்னர் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் விரிவுபடுத்தப்பட்டது.மாணவர்களை தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளுக்குத் தயார் செய்வதுடன், வாழ்க்கைத் திறன்கள், , இசை, நடனம், , நிதி எழுத்தறிவு, சுய பாதுகாப்பு மற்றும் ஆங்கிலத் தொடர்பு ஆகியவற்றில் பயிற்சி பெறுகின்றனர். இந்த முழுமையான அணுகுமுறை, உலகளவில் பல்வேறு கல்விச் சூழல்களில் சிறந்து விளங்கத் தேவையான அறிவு, திறன் மற்றும் தன்னம்பிக்கையுடன் மாணவர்களை வளர்க்கிறது. இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள முன்னணி நிறுவனங்களில் சேரும் மாணவர்களின் முழு கல்விச் செலவுகளையும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து ஏற்றுக்கொள்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author