உலகின் வல்லரசு நாடான அமெரிக்கா, 99 நாடுகளுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்தாலும், தனது பாதுகாப்புத் தேவைகளுக்காக நார்வே (Norway) நாட்டைப் பெரிதும் சார்ந்துள்ள அதிர்ச்சித் தகவல் ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் (SIPRI) சமீபத்திய அறிக்கையில் வெளியாகியுள்ளது.
2021 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில், அமெரிக்கா அதிக ஆயுதங்களை வாங்கும் ஒரே நாடு நார்வே. அமெரிக்காவைத் தவிர, உக்ரைன் மற்றும் ருமேனியா போன்ற நாடுகளுக்கு நார்வே ஆயுதங்களை விற்பனை செய்கிறது. நார்வே ரஷ்யாவின் அண்டை நாடு, அதுவும் நேட்டோவில் உறுப்பினராக உள்ளது.. குறிப்பாக, ஈரான் உடனான போர் தீவிரமடைந்துள்ள சூழலில், நார்வேயின் அதிநவீன ஏவுகணைத் தொழில்நுட்பங்கள் அமெரிக்க ராணுவத்திற்குப் பக்கபலமாக அமைந்துள்ளன.
நார்வேயின் ‘காங்ஸ்பெர்க்’ (Kongsberg) நிறுவனம் தயாரிக்கும் இந்த ஆயுதங்கள், உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்தவையாகக் கருதப்படுவதால், அமெரிக்கா இதற்காகப் பல பில்லியன் டாலர்களைச் செலவிட்டு வருகிறது.
முக்கியமாக, அமெரிக்கா நார்வேயிடமிருந்து கடற்படை தாக்குதல் ஏவுகணை (NSM) மற்றும் NASAMS எனப்படும் வான் பாதுகாப்பு அமைப்புகளைப் பெறுகிறது. இதில் NASAMS அமைப்பு எவ்வளவு சக்தி வாய்ந்தது என்றால், இது அமெரிக்காவின் வெள்ளை மாளிகை மற்றும் வாஷிங்டன் டி.சி-யின் பாதுகாப்பிற்காகவே பயன்படுத்தப்படுகிறது.
நடுத்தர தூரத்திலிருந்து வரும் போர் விமானங்கள் மற்றும் ஏவுகணைகளைத் துல்லியமாக அழிக்கும் திறன் இதற்கு உண்டு. அதேபோல், 200 கி.மீ தூரம் வரை சென்று கப்பல்களைத் தாக்கும் ‘ஸ்டெல்த்’ ரக NSM ஏவுகணைகளுக்காக, கடந்த 2024-ல் மட்டும் அமெரிக்கா சுமார் 904 மில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
ரஷ்யாவின் அண்டை நாடான நார்வே, உலக ஆயுதச் சந்தையில் தனது ஆதிக்கத்தைச் செலுத்தி வருவது சர்வதேச அரசியலில் உற்று நோக்கப்படுகிறது.
