தமிழக ஆளுநராகப் பணியாற்றி வந்த ஆர்.என்.ரவி மேற்குவங்க ஆளுநராக மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இன்று (மார்ச் 12) பதவியேற்றுக் கொண்டார்.
கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இந்த விழாவில், சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
மேற்குவங்க ஆளுநராக இருந்த சி.வி.ஆனந்த போஸ் பதவி விலகியதைத் தொடர்ந்து, அங்கு ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டார்.
இதன் காரணமாக காலியாக இருந்த தமிழக ஆளுநர் பதவியைக் கேரள ஆளுநராக இருக்கும் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கூடுதலாகக் கவனிப்பார் என்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அறிவித்திருந்தார்.
அதன்படி நேற்றிரவு சென்னை வந்த அவர் இன்று முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார்.
