பாகிஸ்தானில் புதிய புயல்… முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சிறையிலேயே மரணம்…?

Estimated read time 1 min read

பாகிஸ்தான் அரசியலில் பெரும் புயலைக் கிளப்பும் வகையில், நாட்டின் முன்னாள் பிரதமரும் பாகிஸ்தான் தெரீக்-இ-இன்சாப் கட்சியின் நிறுவனருமான இம்ரான் கானின் உடல்நிலை மற்றும் பாதுகாப்பு குறித்த அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரான் கான் உயிருடன் இருக்கிறாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளதால், அந்நாட்டில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

பிரபல பாகிஸ்தானியப் பத்திரிகையாளர் வஜாத் சயீத் கான் தனது யூடியூப் சேனல் மூலமாக வெளியிட்டுள்ள தகவல் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, மூன்று மூத்த ராணுவ வட்டாரங்கள் தனக்குத் தெரிவித்த தகவலின்படி, இம்ரான் கான் இப்போது உயிரோடு இருக்கிறாரா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், அந்த வட்டாரங்கள் இம்ரான் கானை நேரில் பார்த்தோ அல்லது நேரடியாக உறுதிப்படுத்தியோ இந்தக் கூற்றைக் கூறவில்லை என்பதையும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். ஆயினும், இம்ரான் கானைச் சந்திப்பதற்கு அவரது குடும்பத்தினருக்கும், கட்சித் தலைவர்களுக்கும், வழக்கறிஞர்களுக்கும், தனிப்பட்ட மருத்துவர்களுக்கும் தொடர்ச்சியாக அனுமதி மறுக்கப்பட்டு வருவதால், இந்தச் சந்தேகம் தற்போது பல மடங்கு அதிகரித்துள்ளது.

கடந்த 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரான் கான் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. சிறையில் அவரைத் தனிமைப்படுத்தி வைத்துள்ளதாகவும், முறையான மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படவில்லை என்றும் PTI கட்சி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.

கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில்கூட, இம்ரான் கானின் குடும்பத்தினரும், கைபர் பக்துன்க்வா மாகாண முதலமைச்சர் சோகேல் அப்ரிடியும் அதியாலா சிறைக்குச் சென்றபோது தடுத்து நிறுத்தப்பட்டனர். இதுதொடர்பாகக் கட்சி சார்பில் பல்வேறு போராட்டங்களும் நடத்தப்பட்டன.

தற்போது பரவி வரும் இந்த உறுதிப்படுத்தப்படாத தகவல்களால், பாகிஸ்தான் அரசியல் வட்டாரத்தில் பெரும் பதற்றம் உருவாகியுள்ளது. இம்ரான் கானின் நிலை குறித்து உரிய விளக்கம் அளிக்கப்படவில்லை என்றால், கோடிக்கணக்கான தொண்டர்கள் வீதி இறங்கிப் போராடுவார்கள் என PTI தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது. சிறை அறைக்குள் இருக்கும் முன்னாள் பிரதமரின் உண்மையான நிலை என்ன என்பது குறித்த மர்மம் தொடர்வதால், பாகிஸ்தானில் உச்சக்கட்ட அரசியல் பரபரப்பு நிலவுகிறது.

You May Also Like

More From Author