சொல்லி அடித்த கில்லி மாதிரி, துல்லியம் என்றால் அப்படியொரு துல்லியம். சந்தேகப்பட வைக்கிற, பொறாமைப்பட வைக்கிற துல்லியம்!
ஜோர்டான் நாட்டின் முவாஃபாக் சால்டி பகுதியில் இருந்த விமானப்படைத்தளமும் சரி, அதில் இருந்த 300 மில்லியன் டாலர் மதிப்புள்ள தாட் ரேடார் அமைப்பும் (THAAD radar system) சரி தவிடுபொடியாகி விட்டன.
ஏஎன்/டிபிஒய்-2 ராடார்கள் செயலிழந்து ஊனமாகிவிட்டன.
இராக் நாட்டின் தலைநகரமான பாக்தாத்தில் அமெரிக்க தூதரகத்தின் தலைமீது சொல்லி வைத்த மாதிரி ஈரானிய ஏவுகணை வந்து சொருகியிருக்கிறது.
ஒருவேளை ஈரான் குருட்டாம்போக்கில் ஏவுகிற ஏவுகணைகள் எல்லாம் குறிதவறாமல் தாக்குகிறதா?
அப்படி எதுவும் இல்லை. இதற்கெல்லாம் பின்னணியில் இருப்பது ஒரு கப்பல். சீனாவுக்குச் சொந்தமான ஓர் உளவுக்கப்பல்.
அந்த கப்பலின் பெயர் லியாவாங்-1 (Liaowang-1)
ஓமான் நாட்டின் கரைக்கு அப்பால் பாந்தமாக இருந்து வளைகுடா போரை அந்தக் கப்பல் கண்காணித்துக் கொண்டிருக்கிறது.
கிரிக்கெட் ரன்னிங் கமெண்டரி மாதிரி அமெரிக்க, இஸ்ரேல் படைகளின் ஒவ்வொரு அசைவையும் ஈரானுக்கு சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.
லியாவாங்-1 கப்பலில் பிரம்மாண்டமான ரேடார் உள்ளது. மின்காந்த சமிக்ஞைகளை கண்டறியும் சென்சர்கள் இருக்கின்றன.
ஆயிரம் கிலோ மீட்டருக்கு அப்பால் நடக்கும் படை அசைவுகள், பறக்கும் விமானங்களை, நகரும் கப்பல்களை இந்த லியாவாங்-1 கப்பலால் கண்காணித்து உடனுக்குடன் போட்டுக் கொடுக்க முடியும்.
இதேப்போல ரஷியாவும் அதன் பங்குக்கு உளவுத் தகவல்களை ஈரானுக்குப் பரிமாறிக் கொண்டிருக்கிறது.

சீனக் கப்பல் ஒரு ஏவுகணையைக் கூட ஏவுவதில்லை.
அமைதியாக எதிரியின் நடமாட்டத்தை அசைவுகளை மட்டும் கண்காணித்து ஈரானுக்குத் தகவல் தெரிவிக்கிறது.
மீதத்தை ஈரான் பார்த்துக் கொள்கிறது.
சரி. சீன உளவுக் கப்பல் ஓமான் அருகே கடலில் மிதப்பது அமெரிக்காவுக்குத் தெரியாதா?
அமெரிக்காவுக்குத் தெரியும். அமெரிக்கா அந்த கப்பலை கவனித்துக் கொண்டிருக்கிறது. சீன உளவுக் கப்பல் அங்கே என்ன செய்து கொண்டிருக்கிறது என்பது அமெரிக்காவுக்கு நன்றாகவே தெரியும்.
அப்புறம் என்ன? அமெரிக்கா அந்த கப்பல் மீது ஏதாவது நடவடிக்கை எடுக்காதா?
இல்லை. ஈரானையே சமாளிக்க முடியாமல் அமெரிக்கா இப்போது விழிபிதுங்கித் திணறுகிறது.
இந்த அழகில் சீனாவுடன் வம்பிழுக்க அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற நாடுகள் தயாராக இல்லை. பிறகு கதறக்கதற அடிவாங்க வேண்டியிருக்கும்.
தவிர, சீன உளவுக் கப்பல் பன்னாட்டு விதிமுறை எதையும் மீறவில்லை. எந்த நாட்டுக்கும் சொந்தமில்லாத பொதுவான கடலில் அது நிற்கிறது. சமர்த்தாக அதன் வேலையை அது பார்த்துக் கொண்டிருக்கிறது.
அமெரிக்கா, ஈரானுடன் போர் நடத்திக் கொண்டிருப்பதாக ஒருவேளை நினைக்கலாம்.
ஆனால், அது உண்மையில் போர் நடத்திக் கொண்டிருப்பது சீனாவுடன்.
வளைகுடா பகுதி என்கிற சதுரங்கப் பலகையில் சீனக்கப்பல் என்ற பெரிய காயை கண்டுகொள்ளாமல் ஈரானுடன் மட்டும் விளையாடிக் கொண்டிருக்கிறது அமெரிக்கா.
சீனா சிரித்துக் கொண்டிருக்கிறது.
– மோகன ரூபன் முகநூல் பதிவு
