ஈரான் போர் காரணமாக உலக நாடுகள் பெரும் எரிசக்தி நெருக்கடியைச் சந்தித்து வரும் நிலையில், பிலிப்பைன்ஸ் நாடு வரலாற்றிலேயே முதல் முறையாக ‘தேசிய எரிசக்தி அவசர நிலையை’ (National Energy Emergency) அறிவித்துள்ளது.
அந்நாட்டின் அதிபர் பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் பிறப்பித்துள்ள இந்த உத்தரவு, உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
வளைகுடா நாடுகளில் இருந்து 98 சதவீத கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யும் பிலிப்பைன்ஸில், பிப்ரவரி 28-ல் போர் தொடங்கியதில் இருந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது. தற்போது அந்நாட்டில் வெறும் 45 நாட்களுக்கு மட்டுமே எண்ணெய் இருப்பு உள்ளதால், பொருளாதாரம் முற்றிலும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த நெருக்கடியைச் சமாளிக்க பிலிப்பைன்ஸ் அரசு சிறப்புப் பணிக் குழுவை அமைத்து, அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது.
மானியங்கள் வழங்க மறுத்துள்ள அரசு, தற்காலிக தீர்வாக நிலக்கரி மூலம் மின் உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளதுடன், எண்ணெய் விநியோகத்திற்காகச் சீனா மற்றும் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
பிலிப்பைன்ஸ் மட்டுமின்றி இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ் உள்ளிட்ட 14-க்கும் மேற்பட்ட நாடுகள் ஏற்கனவே எரிபொருள் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. நிலைமை சீரடையாவிட்டால், பல நாடுகளில் மீண்டும் ஒரு ‘லாக்டவுன்’ போன்ற சூழல் உருவாகலாம் என அஞ்சப்படுகிறது.
