பனிமய மாதா தேர்த்திருவிழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்துக்கு வரும் ஆகஸ்ட் 5ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் இந்த விடுமுறை பொருந்தும்.
அத்தியாவசியப் பணிகள் மற்றும் அவசரப் பணிகளை மேற்கொள்ளும் அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள் போன்றவற்றுக்கு இந்த விடுமுறை பொருந்தாது. அரசு கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களுடன் இயங்கும். இந்த விடுமுறைக்கு பதிலாக 9.8.2025 இரண்டாம் சனிக்கிழமை அலுவலக நாளாக அறிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 5ம் தேதி செவ்வாய்க்கிழமை வருகிறது. ஆகையால் அதற்கு முந்தைய நாள் 4ம் தேதி திங்கட்கிழமை ஒரு நாள் லீவு போட்டால் 2ம் தேதி சனிக்கிழமை, 3ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, திங்கள், செவ்வாய் என தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை கிடைக்கும். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின் விடுமுறை அறிவிப்பால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு ஊழியர்கள் கொண்டாட்டம் அடைந்துள்ளனர்.
இதேபோல் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்திற்கு வரும் 28ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை ஈடுசெய்யும் வகையில் ஆகஸ்ட் 9ம் தேதி வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.