மத்திய கிழக்கில் போர் பதற்றம் நீடித்து வரும் வேளையில், இந்தியாவிற்கு நிம்மதி அளிக்கும் வகையில் ஒரு மிகமுக்கிய நற்செய்தி வெளியாகியுள்ளது. உலகளாவிய எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ஹோர்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz), இந்தியா உள்ளிட்ட தனது நட்பு நாடுகளின் கப்பல்கள் பயன்படுத்த ஈரான் அதிகாரப்பூர்வமாக அனுமதி அளித்துள்ளது.
ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸின் கோரிக்கையை ஏற்று, ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதன் மூலம் இந்தியா, ரஷ்யா, சீனா, ஈராக் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் கப்பல்கள் எவ்வித தடையுமின்றி இந்த கடல்வழிப் பாதையைப் பயன்படுத்த முடியும். பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி கேஸ் விநியோகத்திற்கு இந்த ஜலசந்தி மிக முக்கியமானது என்பதால், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு குறித்த கவலை இப்போது தணிந்துள்ளது.
இருப்பினும், இந்த அனுமதியானது ஈரானின் கடுமையான பாதுகாப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டது என்றும், ஈரானிய அதிகாரிகளின் நேரடி மேற்பார்வையின் கீழ் மட்டுமே கப்பல்கள் அனுமதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானுடன் பகைமை பாராட்டாத நாடுகளின் கப்பல்கள் மட்டுமே பாதுகாப்பாகச் செல்ல முடியும் எனத் தெஹ்ரான் தெளிவுபடுத்தியுள்ளது.
கடந்த சில வாரங்களாக ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்பட்டிருந்ததால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து, உரங்கள் மற்றும் எரிவாயு விநியோகத்தில் பெரும் தட்டுப்பாடு நிலவியது. தற்போது ஈரானின் இந்த இணக்கமான முடிவு, இந்தியாவிற்குப் பொருளாதார ரீதியாகப் பெரும் பலத்தைத் தந்துள்ளதோடு, போர்ச் சூழலிலும் ஈரான் – இந்தியா இடையிலான வலுவான நட்புறவை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளது.
