
தூத்துக்குடி : மாவட்டம் சாத்தான்குளத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற கொடூர சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடை நடத்தி வந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டு, போலீஸ் நிலையத்தில் கொடூரமாகத் தாக்கப்பட்டு உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சிபிஐ விசாரணையில் இந்த வழக்கில் 9 போலீசார் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற நீண்ட விசாரணைக்குப் பிறகு, இன்று (ஏப்ரல் 6) குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிக்கப்பட்டது. மதுரை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன், முதல் குற்றவாளியான காவல் ஆய்வாளர் ஸ்ரீதருக்கு மரண தண்டனை விதித்தார். மற்ற 8 (ரகு கணேஷ், முருகன் மற்றும் முத்துராஜ், பாலகிருஷ்ணன், சாமதுரை, செல்லத்துரை, தாமஸ் பிரான்சிஸ் மற்றும் வெயில்முத்து) ஆகியோருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், முதல் குற்றவாளியான ஸ்ரீதருக்கு 15 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
நீதிபதி முத்துக்குமரன் தீர்ப்பு வழங்கும்போது, “இது அரிதினும் அரிதான வழக்கு. காவல்துறையினரால் இரு உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளன. சாதாரண நபர்கள் குற்றம் செய்திருந்தால் வேறு விதமான தண்டனை பொருந்தும். ஆனால் சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய காவல்துறையினரே இந்தக் கொடூரக் குற்றத்தைச் செய்துள்ளனர். எனவே அதிகபட்ச தண்டனையான மரண தண்டனை விதிப்பதே சரியானது” என்று தெளிவாகக் கூறினார்.
மேலும், “ஒரே நேரத்தில் தந்தை-மகன் என ஒரு குடும்பத்தின் ஆணிவேர் பிடுங்கப்பட்டுள்ளது. ஆயுள் தண்டனை விதித்தால் போலீசாருக்கு பயம் வராது. குற்றவாளிகளுக்கு பொருளாதார ரீதியாகவும் கடுமையான தண்டனை வழங்கினால்தான் இது போன்ற குற்றங்கள் தடுக்கப்படும். குற்றவாளிகள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளதால், இது மிகக் கடுமையான குற்றமாகக் கருதப்பட வேண்டும்” என்றும் நீதிபதி வலியுறுத்தினார்.
இந்தத் தீர்ப்பு தமிழ்நாட்டில் காவல்துறை அதிகார தாக்குதலுக்கு எதிரான ஒரு முக்கியமான நீதித்தீர்ப்பாக பார்க்கப்படுகிறது. சிபிஐ தரப்பில் “காவல்துறையினரால் இரு உயிர்கள் பறிக்கப்பட்ட இந்த வழக்கு மிகவும் அரிதானது. எனவே மரண தண்டனை விதிக்க வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டிருந்தது. நீதிபதியும் அதை ஏற்று கடுமையான தண்டனை வழங்கியுள்ளார்.
