இன்று கடைசி நாள் : தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு..!

Estimated read time 1 min read

தமிழகத்தில் சட்டசபை தேர்தல், வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. இதில், தி.மு.க., -அ.தி.மு.க., – த.வெ.க., – நாம் தமிழர் என, நான்கு முனை போட்டி நிலவுகிறது.

இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல், மார்ச் 30ம் தேதி துவங்கியது; மொத்தமுள்ள 234 தொகுதிகளிலும் போட்டியிட, இதுவரை 3,430 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளன. ஆண் வேட்பாளர்களிடம் இருந்து 2,731 மனுக்களும், பெண் வேட்பாளர்களிடம் இருந்து 698 வேட்பு மனுக்களும் பெறப்பட்டுள்ளன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் போட்டியிட, 84 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. வில்லிவாக்கம் சட்டசபை தொகுதியில் போட்டியிட, நாம் தமிழர் கட்சி சார்பில் திருநங்கை ஒருவர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில், வேட்பு மனுக்கள் தாக்கல் செய்வதற்கு இன்று கடைசி நாள். அதனால், தேர்தல் நடத்தும் அலுவலகங்களில், இன்று வேட்பு மனு தாக்கல் களை கட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இறுதி நாளான இன்று, காங்கிரஸ் – பா.ஜ., வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை ஒட்டுமொத்தமாக தாக்கல் செய்ய உள்ளனர். தி.மு.க., கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி 28 தொகுதிகளிலும், அ.தி.மு.க., கூட்டணியில் உள்ள பா.ஜ., 27 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

இறுதி நாளில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய, அரசியல் கட்சியினர் மட்டுமின்றி, சுயேச்சைகளும் அதிகளவில் ஆர்வம் காட்டுவர். அதனால், தேர்தல் அலுவலகங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. வழக்கமாக காலை 11:00 முதல் பிற்பகல் 3:00 மணி வரை வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய அனுமதிக்கப்படும். இறுதி நாளான இன்று கூட்டம் அதிகமாக இருந்தால், வேட்பாளர்களுக்கு ‘டோக்கன்’கள் வழங்கப்படும்.பிற்பகல் 3:00 மணிக்கு முன் எத்தனை பேர் வந்தாலும், அவர்களுக்கு அனுமதி தரப்படும். டோக்கன் வழங்கப்பட்டு, அவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய எவ்வளவு நேரமானாலும் அனுமதிக்கப்படும்.

Please follow and like us:

You May Also Like

More From Author