ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே ஏற்பட்டுள்ள இரண்டு வார கால போர் நிறுத்தம் என்பது போரின் முடிவல்ல, அது ஒரு மைல்கல் மட்டுமே என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
ஈரானிடமிருந்து செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ராஜதந்திர ரீதியாகவோ அல்லது ராணுவ பலத்தைப் பயன்படுத்தியோ முழுமையாக அகற்றுவதே இஸ்ரேலின் இறுதி இலக்கு என அவர் சூளுரைத்துள்ளார். “நாங்கள் ‘கிதியோனின் வாள்’ மற்றும் ‘சிங்கத்தின் கர்ஜனை’ போன்ற நடவடிக்கைகளை எடுக்காமல் இருந்திருந்தால், ஈரான் எப்போதோ அணு ஆயுத பலத்துடன் இஸ்ரேலை அழித்திருக்கும்” என்று குறிப்பிட்டுள்ள நெதன்யாகு, தற்காலிக அமைதி என்பது அடுத்த கட்ட தாக்குதலுக்கான ஆயத்தமே தவிர வேறொன்றுமில்லை என்பதைத் திட்டவட்டமாகப் பதிவு செய்துள்ளார்.
அமெரிக்காவின் அழுத்தத்தால் இஸ்ரேல் பணிந்துவிட்டதாக எழுந்துள்ள விமர்சனங்களை நிராகரித்துள்ள நெதன்யாகு, தங்களின் துப்பாக்கி விசையிலிருந்து விரல்கள் இன்னும் எடுக்கப்படவில்லை என்றும், எந்த நேரத்திலும் மீண்டும் போருக்குத் திரும்பத் தயார் என்றும் எச்சரித்துள்ளார்.
ஈரானின் ஏவுகணை உற்பத்தித் திறனை ஏற்கனவே சிதைத்துவிட்டதாகக் கூறிய அவர், லெபனானில் ஹிஸ்புல்லாவுக்கு எதிரான தாக்குதல்கள் தங்குதடையின்றி தொடரும் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தினார். பெய்ரூட்டில் உள்ள 100-க்கும் மேற்பட்ட இலக்குகளைத் தகர்த்துள்ள நிலையில், இஸ்ரேலின் இந்த ஆக்ரோஷமான நிலைப்பாடு மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் நிறுத்தம் நீடிக்குமா என்ற பெரும் சந்தேகத்தை உலக நாடுகளிடையே ஏற்படுத்தியுள்ளது.
