அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே சமாதானத்தை ஏற்படுத்தியதாக தம்பட்டம் அடித்துக் கொள்ளும் பாகிஸ்தானின் முயற்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஈரானுடனான தற்காலிக போர் நிறுத்தத்திற்கு மத்தியஸ்தம் செய்யுமாறு பாகிஸ்தானை அமெரிக்காவே வற்புறுத்தியதாக ‘ஃபைனான்சியல் டைம்ஸ்’ பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
பாகிஸ்தான் ஒரு நடுநிலையான தரகராகச் செயல்படவில்லை என்றும், மாறாக அமெரிக்கா தனது முன்மொழிவுகளை ஈரானிடம் கொண்டு சேர்க்கும் ஒரு ‘வசதியான வழியாகவே’ பாகிஸ்தானைப் பயன்படுத்தியது என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இதன் மூலம் பாகிஸ்தானின் சுதந்திரமான ராஜதந்திர நிலைப்பாடு குறித்த கேள்விகள் எழுந்துள்ளன.
வாஷிங்டனின் போர் நிறுத்த முன்மொழிவை ஈரானிடம் முன்வைக்குமாறு அமெரிக்கா பாகிஸ்தானை வற்புறுத்தியுள்ளது. இதனால் பாகிஸ்தானின் பங்களிப்பு என்பது ஒரு செயல்திறன்மிக்க நடுவர் என்பதை விட, இரு தரப்புக்கும் இடையில் செய்திகளைப் பரிமாறும் ஒரு ‘தூதுவர்’ (Messenger) என்ற அளவிலேயே இருந்துள்ளது.
இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனீர் முக்கிய பங்காற்றியுள்ளார். அவர் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஜே.டி. வான்ஸ் மற்றும் தூதர் ஸ்டீவ் விட்காஃப் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளுடன் அவசரப் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார்.
ஒரு முஸ்லிம் பெரும்பான்மை நாடாக, அண்டை நாடான பாகிஸ்தான் அமெரிக்காவின் சலுகைகளை வழங்கினால் ஈரான் அதை ஏற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு அதிகம் என்ற கணக்கீட்டின் அடிப்படையிலேயே அமெரிக்கா இந்த வியூகத்தை வகுத்ததாகக் கூறப்படுகிறது. இது பாகிஸ்தானின் ராஜதந்திரத் திறமையால் கிடைத்த வாய்ப்பல்ல, மாறாக அமெரிக்காவின் தேவைக்காக உருவாக்கப்பட்ட சூழல் என்று அந்த அறிக்கை விளக்குகிறது.
இதற்கிடையே, இந்த ஒப்பந்தத்திற்குப் பெருமை தேடிக்கொள்ளும் அவசரத்தில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீஃப் செய்த ஒரு தவறு அந்நாட்டை சர்வதேச அரங்கில் தர்மசங்கடத்திற்கு உள்ளாக்கியுள்ளது. இந்த ஒப்பந்தத்தை பாகிஸ்தானின் சொந்த முயற்சி என்று காட்ட முயன்ற ஷரீஃப், தனது எக்ஸ் (X) தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டார்.
அதில் கவனக்குறைவாக “வரைவு — X குறித்த பாகிஸ்தான் பிரதமரின் செய்தி” (Draft — message of PM of Pakistan on X) என்ற தலைப்பையும் சேர்த்தே பதிவேற்றியிருந்தார். இது அந்தச் செய்தி முன்னரே திட்டமிடப்பட்டு வழங்கப்பட்டது என்பதையும், இந்த ஒப்பந்தத்தில் பாகிஸ்தானின் பங்கு மிகக் குறைவு என்பதையும் வெளிப்படையாக அம்பலப்படுத்தியுள்ளது.
போர் நிறுத்த ஒப்பந்தத்தில் லெபனானும் சேர்க்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்திருந்த கருத்தை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகிய இருவரும் திட்டவட்டமாக நிராகரித்துள்ளனர். இதன் மூலம் ஹிஸ்புல்லாவிற்கு எதிரான தனது ராணுவ நடவடிக்கைகளைத் தொடர இஸ்ரேலுக்கு வழிவகுக்கப்பட்டுள்ளது.
மேலும் சர்வதேச அளவில் தனது செல்வாக்கை நிலைநாட்ட முயன்ற பாகிஸ்தானுக்கு, இந்தத் தகவல் வெளியாகி இருப்பது பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
