சீனாவின் மின்னணு கட்டணத் தளமான வீசாட் பே முறையைப் பயன்படுத்தும் பயனர்கள் தற்போது தென் கொரியா, இலங்கை, தாய்லாந்து, மலேசியா மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட 5 நாடுகளில் அந்நாட்டின் கியூ ஆர் குறிகளை நேரடியாக ஸ்கேன் செய்து பணம் செலுத்த முடியும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக மேற்கண்ட நாடுகளுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் உள்ளூர்ச் செயலிகளைப் பதிவிறக்கம் செய்யவோ, ரொக்கப் பரிமாற்றம் செய்யவோ தேவையில்லை என்று வீசாட் பே அமைப்பின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சீனாவின் தேசிய குடிவரவு நிர்வாகம் வெளியிட்ட தகவலின்படி, ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் எல்லை அதிகாரிகள் 18.5 கோடி சர்வதேச பயணங்களை பதிவு செய்துள்ளது தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை 13.5 சதவீதம் அதிகரித்துள்ளது. வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா தொடர்ந்து வளர்ந்து வருவதால், எல்லைத் தாண்டிய கட்டண சேவைகளுக்கான தேவை மற்றும் வாய்ப்புகளும் அதிகரித்துள்ளன.
தற்போதைய நிலவரப்படி 78 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் கிடைக்கும் வீசாட் பே அமைப்பு முறையின் சர்வதேசச் சேவையானது, 36 நாணயங்கள் சார்ந்த ஆதரவையும் வழங்குகிறது.
இதனிடையில் சீனா, வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளுக்கான கட்டண வசதிகளையும் எளிதாக்கியுள்ளது. அதன்படி, வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் தங்கள் நாடுகளின் வங்கி அட்டைகளை அலிபே அல்லது வீசாட் பே அமைப்பு முறையுடன் இணைத்து சீனாவில் உள்ள வணிக நிறுவனங்களில் பயன்படுத்தலாம். மேலும், உள்நாட்டு கட்டண நிறுவனங்களுடன் இணைந்து, வெளிநாட்டு இ-வாலட் எனப்படும் மின்னணு பணப்பைகளைச் சீனாவில் பயன்படுத்துவதற்குரிய வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டில், 1 கோடிக்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்த சேவைகளைப் பயன்படுத்தியுள்ளனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இத்தகைய வழிமுறையில் செய்யப்பட்டுள்ள நுகர்வுச் செலவானது 100 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியைக் கண்டுள்ளது.
