
தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், தவெகவின் அரசியல் வருகை பல்வேறு கணிப்புகளை உருவாக்க காரணமாக அமைந்துள்ளது. நகரப் பகுதிகளில் மட்டுமல்லாமல் கிராமப் பகுதியிலும் தவெகவுக்கு பொதுமக்கள் வாக்களித்துள்ளதாக பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் 2021 தேர்தலை ஒப்பிடும் போது, கூடுதலாக 20 முதல் 25 லட்சம் வரையிலான வாக்குகள் பதிவாகி இருக்கிறது.
இந்நிலையில் முன்னாள் வழக்கறிஞரும் மூத்த பத்திரிகையாளருமான தராசு ஷ்யாம் தனது கணிப்பை வெளியிட்டுள்ளார்.
2014ல் ஜெயலலிதாவுக்கே தண்டனை அளிக்கப்பட்ட போதும், ஆட்சி மீதான அதிருப்தி இருந்த போதும், அதிமுக ஆட்சியை தொடர்ந்தது. அப்போது 4 முனைப் போட்டி உருவாகியது. இதன் மூலமாக எப்போது 4 முனைப் போட்டி உருவானாலும், அது ஆளுங்கட்சிக்கு தான் லாபம். என்னுடைய கணிப்புப்படி, ஒருநாளும் தொங்கு சட்டசபை அமையாது.
திமுக 150 முதல் 180 இடங்கள் வரை வெல்லலாம். விஜய் கூடுதலாக வாக்குகளை பெற்றால், திமுக 200 இடங்கள் வரை கைப்பற்றும். பதிவான வாக்குகள் கூடும் போது, 4 கட்சிகளுமே களத்தில் பணியாற்றி இருப்பார்கள். இங்கே சதவிகித கணக்கை விடவும், சீட்டு கணக்கு முக்கியம். விஜய், சீமான் ஆகியோர் எதிர்பார்க்காததை விட அதிக வாக்குகளை பெற்றால், அது திமுகவுக்கு சாதகமாக இருக்கும்.
தேர்தல் ஆணைய விதிப்படி டெபாசிட் பெற 16.6% வாக்குகள் தேவை. ஆனால் விஜய்யின் வாக்கு வங்கி 8% முதல் 12% வரை மட்டும் இருக்கும். அதனால் அவரது கட்சி பெரும்பாலான தொகுதிகளில் டெபாசிட் இழக்கும் என அவர் கூறுகிறார்.
திமுகவின் வாக்கு வங்கி என்பது திராவிட சித்தாந்தம், சமூக நீதி, நலத்திட்டங்கள் ஆகியவற்றால் உருவானது. எனவே விஜய்யால் திமுக வாக்கை சிதைக்க முடியாது. 18 முதல் 30 வயதுடைய புதிய வாக்காளர்கள் மட்டுமே விஜய்யை ஒரு மாற்றாக பார்க்கக்கூடும். ஆனால் அவர்களும் நலத்திட்டங்களால் பயன் அடைந்திருந்தால் ஆளும் கட்சிக்கே முன்னுரிமை அளிப்பார்கள்.
அதேபோல் திமுக, அதிமுக போன்ற கட்சிகளுக்கு இருக்கும் நீண்ட கால தேர்தல் அனுபவம் மற்றும் பூத் மேனேஜ்மென்ட் திறன் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு கிடையாது. புதிய சின்னங்களுடன் போட்டியிடும்போது, வாக்குச்சாவடியில் எளிய மக்களுக்கு அந்த சின்னத்தை கண்டறிந்து வாக்களிக்க சொல்லி கொடுக்க போதிய தொண்டர்கள் பலமும் இல்லை என தராசு ஷ்யான் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், சென்னையில் வாக்கு சதவீதம் அதிகரித்ததாக தெரிந்தாலும், உண்மையில் 2021 தேர்தலை விட 2024ல் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இது விஜய் போன்ற புதியவர்களுக்கு பின்னடைவே. அதேபோல் சென்னையில் இருந்து சுமார் 4 லட்சம் வாக்காளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்று வாக்களித்து உள்ளனர். இதனால் அவர்களின் வாக்குகள் 150 தொகுதிகளில் சிதறிவிடும். அது விஜய்க்கு எந்த தொகுதியிலும் பெரிய பலத்தை கொடுக்காது.
மேலும், தவெக-வில் உள்ள பல வேட்பாளர்கள் மற்ற கட்சிகளில் வாய்ப்பு கிடைக்காதவர்கள். ராஜ்மோகம், நிர்மல் குமார் போன்ற ஒரு சிலரை தவிர மற்றவர்கள் வெற்றி பெறுவதற்கான செல்வாக்கு கூட கிடையாது என விமர்சித்தார்.
