தமிழகத்தில் ஊழல் வழக்கு உள்ளிட்ட சட்டவிரோத செயலில் ஈடுபட்டுள்ள 6 அமைச்சர்கள், 80 நாட்களுக்குள் சிறை செல்வது உறுதி என்று தமிழக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திருச்சியில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ஹெச்.ராஜா, பல்வேறு அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.
திமுக அரசும், காவல்துறையினரும் அரசியல் பாரபட்சமாக நடந்து கொள்கிறார்கள். இது போன்ற செயலை உடனே நிறுத்த வேண்டும். இல்லையெனில் நிறுத்த வைப்போம். திமுக அரசும், காவல்துறையினரின் பாரபட்ச நடவடிக்கையைக் கண்டித்து, பா.ஜ.க போராட்டத்திற்குத் தயாராகி வருகிறது. என்னுடைய கணிப்பு சரியாக இருக்கும் என்றால், வரும் 80 நாட்களுக்குள் 6 திமுக அமைச்சர்கள் சிறை செல்வது உறுதி. தி.மு.க. அழியும் நிலையில் உள்ளது என்று தெரிவித்தார்.
மேலும், பா.ஜ.க மாநிலக் கட்சி அல்ல. தேசிய கட்சி. எனவே, கூட்டணி அமைப்பதை அகில இந்தியத் தலைமையே முடிவு செய்யும். யாருடன் கூட்டணி என்பதைத் தலைமை பார்த்துக் கொள்ளும். தமிழக அரசியலில் பாஜக மிகப்பெரிய சக்தியாக உருவெடுக்கும்.
நடிகர் விஜய் அரசியல் கட்சி துவங்கியுள்ளார். அவரது அரசியல் நிலைப்பாடு, கருத்துச் சொல்லும் போது தான் தெரியும். அப்போதுதான் அதைப் பற்றி கருத்துச் சொல்ல முடியும் என்றார்.
புள்ளி வச்ச கூட்டணியில், ஒரு அங்கம்தான் மம்தா பானர்ஜி. அவரே சொல்கிறார், நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியால் 40 தொகுதிகளில் கூட வெற்றி பெற முடியாது என்று. வரும் நாடாளுமன்றத் தேர்தலில், பா.ஜ.க. 400 -க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெரும்.
நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளிடம் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்திய போது, துப்பாக்கி, வெடி பொருட்கள் போன்ற ஆயுதங்களைக் கைப்பற்றியுள்ளனர்.
இது நாட்டுக்கு மிகவும் ஆபத்தான விசயம். யாருக்கு எதிராக ஆயுதங்களைப் பயன்படுத்தப் போகிறார்கள் என்று தெரிய வேண்டியது கட்டாயம். சட்ட விரோத எண்ணம் இல்லாமல், ஆயுதங்கள் சேகரிக்க மாட்டார்கள். அடிப்படை ஆதாரம் இல்லாமல், என்.ஐ.ஏ. சோதனை நடத்தாது என்றும் உறுதிபடத் தெரிவித்துள்ளார். ஹெச்.ராஜாவின் பேட்டி தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.